தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற படைப்பாளி- இயக்குநர் மகேந்திரனின் சினிமா பயணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில் மனித மனங்களின் உணர்வுகளை, வாழ்வின் அழகியலை நுட்பமாக காட்சிப்படுத்தும் திரைச்சித்திரங்களைத் தந்தவர் இயக்குநர் மகேந்திரன்.

A big loss for Cinema- Veteran Director J Mahendran passed away

இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளையான்குடியில் கடந்த 1939-ல் பிறந்த இயக்குநர் மகேந்திரனை திரைத்துறைக்கு அழைத்து வந்தவர் நடிகரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடித்த ‘காஞ்சி தலைவன்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பின், சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்’, ‘காளி’, ‘பகலில் ஒரு இரவு’ போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய மகேந்திரன், துக்ளக் போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்திய சினிமாவின் அடையாளமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு குணச்சித்திர நடிகராக காட்டியவர் மகேந்திரன். அவர் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக இன்றும் திகழ்கிறது.

மேலும், ‘உதிரிப்பூக்கள்’, ‘பூட்டாத பூட்டுகள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘நண்டு’, ‘மெட்டி’ உள்ளிட்ட திரைப்படங்களும் எதார்த்த வாழ்வியலை மெல்லிய உணர்வுகளோடு கூறிய திரைப்படங்களாகும். இதில் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ திரைப்படம் தேசிய விருதுகளை வென்றது.

அவரது ஆகச்சிறந்த படைப்புகள் மட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டி மக்களை கவர்ந்தார். அத்துடன் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்திலும் இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார். 

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி-கமல், விஜய்.. என 3 தலைமுறை நடிகர்களுடன் பணியாற்றியுள்ள இயக்குநர் மகேந்திரனின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடு இணையில்லாத பேரிழப்பு தான்..!