‘தீவிரவாத முகாமில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்ட உளவுத்துறை’.. அதிரும் இணையதளம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Feb 26, 2019 03:59 PM
புல்வாமா தாக்குதலில் இந்தியா சுமார் 40 துணை நிலை ராணுவ வீரர்களை இழந்த பிறகான முதல் பதிலடி தாக்குதலாக, இன்று இந்திய ராணுவப்படையானது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எனப்படும் நடுவானத் தாக்குதலை நிகழ்த்தியது.
பலரும் பாராட்டி வரும் இந்தத் தாக்குதல் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட்' என்று ட்வீட் செய்துள்ளர். இதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்திய ராணுவப்படைக்கு சல்யூட் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளித்துவருவதாக ராணுவத் தலைமை கூறிவரும் நிலையில், தற்போது இந்திய ராணுவப்படையினரின் எதிர்த் தாக்குதலுக்குள்ளான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த முகாம்களின் புகைப்படங்களை இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்களில் காணப்படும் தீவிரவாத முகாமின் படத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டடத்தின் மேல், அமெரிக்கா, பிரட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டின் கொடிகள் வரையப்பட்டுள்ளதோடு, 200 -க்கும் மேற்பட்ட ஏ.கே துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மற்றும் வெடிகுண்டுகள், தோட்டாக்கள் இருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் மைத்துனர் மவுலான யூசஃப் அசார் என்பவரால் வழிநடத்தப்பட்ட இந்த முகாமில் தங்கியிருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு செயலர் விஜய் கோகலே டெல்லியில் பேசியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து, பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்தும் இந்தியாவின் தாக்குதல் குறித்தும் பேசப்படவிருக்கிறது. அதில் முதற்கட்டமாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தியதோடு, சரியான நேரத்திலும் தகுந்த இடத்திலும் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை என்று கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஹெய்ஷ்-இ-முகமது அமைப்பின் அடுத்த தாக்குதல் முடிவில் இருந்து இந்தியா தற்காத்துக்கொள்ளும் விதமாகவே இந்த தாக்குதலை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இருக்கும் இடத்துக்கான புகைப்படங்களும், தீவிரவாதிகளின் புகைப்படங்களும் உளவுத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.