‘நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை’.. ஆனால் இந்த பிரச்சனையை தீர்ப்பவருக்குக் கொடுக்கலாம்: இம்ரான் கான்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 04, 2019 03:59 PM

அமைதிக்கான நோபல் பரிசு வாங்க நான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Imran Khan Says He\'s not worthy of Nobel Peace Prize

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தாக்குதலை அடுத்து இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது என விமானப்படை தெரிவித்தது. இதற்கிடையே நடந்த விமானப்படைத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தன. இதனை அடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், போர் வர நாங்கள் விரும்பவில்லை எனவும், அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என இம்ரான் கான் அறிவித்தார்.

இதனை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பினார். அமைதிக்கு வித்திட்ட இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் கான் கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில்,‘அமைதிக்கான நோபல் பரிசு வாங்க நான் தகுதியானவன் இல்லை. யார் காஷ்மீர் மக்களின் விருப்பப்படி காஷ்மீர் பிரச்சனையை சரிசெய்கிறார்களோ அவர்களே அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர்கள்’ என இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : #IMRANKHAN #NOBELPEACEFORIMRANKHAN