இருள் மூழ்கிய நாடு.. உலக அரசியலின் உச்சபட்சம்.. தத்தளிக்கும் வெனிசுலா மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Mar 09, 2019 08:21 PM
பெரும் அரசியல் குழப்பங்களும், பொருளாதார வீழ்ச்சியும் வெனிசுலாவில் உருவாக்கியுள்ள நெருக்கடியால் அந்நாடு தத்தளித்து வருகிறது.
தென் அமெரிக்காவின் முக்கியமான நாடு வெனிசுலா. எண்ணெய் வளம் உள்ளிட்ட எத்தனையோ வளங்கள் இருந்தும், அரசின் மிக மோசமான நிர்வாகத்தால் உண்டான பணவீக்கம் உச்சபட்ச துயரத்துக்கு அந்நாட்டை தள்ளிவிட்டிருக்கிறது எனலாம்.
2010-ல் அப்போதைய வெனிசுலா அதிபர் சாவேஸ், அரசு மயமாக்கலை முன்னெடுத்ததில் தொடங்கி 2014-ஆம் ஆண்டு பணவீக்கம் பெரிய அளவில் உண்டானது வரை அத்தனையும் நடந்ததற்கு காரணம் தனியாரிடம் இருந்த நிறுவனங்களையும் சந்தை மற்றும் உற்பத்தி அதிகாரங்களையும் அரசு பிரதிநிதிகளிடம் ஒப்படைத்ததுதான் காரணம் என்று உலக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய அதிபருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்குமான முரண்பாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் தன்னை அதிபராக நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிபர் நிகோலஸ் மதுரோ, ஜூவானுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் உதவிகளை ஏற்க மறுத்தார்.
ஐ.நாவுக்கு விவகாரம் சென்றது. அதிபர் தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் ரஷ்யா மற்றும் சீனா தங்களின் வீட்டோ அதிகாரம் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் செய்துவிட்டன.
இந்த சூழலில்தான் அந்நாட்டின் மின் இணைப்பு 20 மணி நேரத்துக்கு மேல் துண்டிக்கப்பட்டது. பேருந்து வசதிகள் முடங்கின. நோயாளிகள் பலர் மோசமான நிலையை அடைந்தனர். தலைநகரமே இருளில் மூழ்கியது. ஜெனரேட்டர்களும் உழைத்து ஓய்ந்தன. செல்போன் டார்ச் லைட்டுகளின் ஒளி அளவும் பேட்டரி குறைந்ததால் தீர்ந்தன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தேபோனார்.
அந்நாட்டின் மின் தேவைக்கென முக்கிய ஆதாரமாக இருந்த, கரி நீர்மின் திறன் அணையில் உண்டான கோளாறு இந்த தடைகளை உருவாக்கியதாக கூறப்பட்டாலும், இத்தகைய அரசிய சூழலில் இவ்வளவு பெரிய இடறில் சிக்கிய மக்களின் துயரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.