நாம் பல நாளாக எதிர்பார்த்த அந்த வசதியையும் ஒரு வழியாக கொண்டுவந்த வாட்ஸ் ஆப்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Siva Sankar | Apr 03, 2019 10:15 AM
சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை அவற்றில் வலம் வரும் தகவல்கள் மற்றும் பரவு தகவல்கள் என இருவகைகள் இருக்கின்றன. தவறான செய்திகள் அல்லது தகவல்கள் பரவி வருவதை தடுக்க முடியாத சூழல் உருவாவதோடு அவற்றை நம்பி ஃபர்வேர்டு பண்ணுபவர்களும், அவற்றை நம்பி ஃபாலோ பண்ணுபவர்களும் மோசம் போகின்றனர் என்பது கூடுதல் சோகம்.
இலங்கை போர்க்குற்றத்தை பற்றி ஐ.நாவில் முறையிடுவதற்கான வாக்களிப்புக்கு இன்றுதான் கடைசி நாள் என தொடங்கி, அவசர ரத்த உதவி தேவை என்பது வரையிலான பல தகவல்கள் பழையனவாக இருக்கின்றன. கிட்டத்தட்ட அவற்றை வருடக் கணக்கில் வாட்ஸ் ஆப்பில் பார்க்க முடிகிறது.
பயனீட்டாளர்களுக்கென பல்வேறு புதிய வசதிகளை அவ்வப்போது அப்டேட் செய்துவரும் வாட்ஸ் ஆப், இப்படியான போலித் தரவுகள் வதந்திகளாக பரவுவதையும் தடுக்கும் வகையில் தற்போது முக்கியமான வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி, வாட்ஸ் ஆப்பில் வரும் ஒரு தகவலின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்றால், பயனர் சந்தேகிக்கும் ஒரு தகவலை +91-9643-000-888 என்கிற எண்ணுக்கு அனுப்பலாம். அது மெசேஜ், புகைப்படம், வீடியோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தனியார் தொழில் முனைவோரின் உதவியுடன் பணியமர்த்தப்பட்டுள்ள சேவை மைய அதிகாரிகள் அந்தத் தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து நமக்கு விளக்கம் அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, வங்கமொழிகளில் இந்த சேவை அளிக்கப்படுகிறது. விரைவில் மற்ற மொழிகளுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.
இதேபோல் ஒரு நபரை வாட்ஸ் ஆப் குழுவில் சேர்க்க அந்நபரது அனுமதியும் கேட்கும் ஆப்ஷனை விரைவில் கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென சம்மந்தப்பட்டவருக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். குழுவில் சேருவதற்கான ஒப்புதலை அவர் அந்த 3 நாட்களுக்குள் கொடுக்கலாம். அதாவது ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.