இப்படியும் ஒரு போலீஸா? எஸ்.பியின் மனிதாபிமானத்தைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த மக்கள்! காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | Mar 28, 2019 08:45 PM
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சையது பாஷா. இவரது மகன் ஜாபர் அலி. இவர் சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் செய்தி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், தனக்கு விபத்தின் மூலம் முதுகு தண்டுவட எலும்பு முறிவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும், இதனால் இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டது எனவும், இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பதாகவும், யாராவது 3 சக்கர வாகனம் வாங்கி கொடுத்தால், தன்னால் வெளியுலகத்தைப் பார்க்க இயலும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஜெயக்குமார் துணை எஸ்.பி மகேஷை அழைத்து, வாட்ஸ் அப்பில் வந்த தகவல் உண்மையானதா என்று விசாரிக்கச் சொன்னார். இதையடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோர் ராமராஜபுரம் சென்று விசாரித்தனர்.
அதில் ஜாபர் அலி 19 வயதாக இருக்கும் போது, மாமரத்தில் ஏறியுள்ளார். அப்போது தவறி விழுந்ததில் முதுகு தண்டுவட எலும்பு பாதிக்கப்பட்டது. இதுகுறித்து எஸ்.பி ஜெயக்குமாரிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட எஸ்.ஐ, திருக்கோவிலூர் உட்கோட்ட துணை எஸ்.ஐ, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து ஸ்கூட்டி பெப் (Scooty Pep) வாங்கிக் கொடுத்தனர்.
இதனை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், ஜாபர் அலியின் வீட்டிற்கே சென்று அளித்து ஊக்கப்படுத்தினார். இந்த சம்பவம் அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது கூறிப்பிடத்தக்கது.