மக்களவைத் தேர்தல் 2019: வேட்புமனுத் தாக்கலின்போது அரங்கேறிய சுவாரஸியங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Mar 27, 2019 12:05 PM
வேட்புமனு தாக்கலின்போது தமிழத்தில் பல்வேறு இடங்களில் பல சுவாரசியமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறின.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இறுதி நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள் சிலர், பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான முறையில் மனு தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான ரெங்கநாயகன், நொண்டி அடித்தபடி சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதை வலியுறுத்தும் வகையில் நொண்டியடித்தபடி சென்று வேட்புமனுத் தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்தார். மற்றொரு சுயேட்சை வேட்பாளரான தாவீது, நேரம் முடிவடைந்தப் பிறகு வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். அவரைத் தேர்தல் அலுவலர் அனுமதிக்காததால், வேட்பாளர் தாவீது, ஏமாற்றத்துடன் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனுத் தாக்கலுக்காக அரபு நாடுகளின் ஷேக் போல வந்த அல்லா பிச்சை என்பவர், தேர்தல் அலுவலர் அறைக்குள் பெரிய சூட்கேஸூடன் நுழைந்தார். பெட்டியை எடுத்துச்செல்ல போலீசார் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், தனது பெட்டியை உள்ளே எடுத்து செல்வேன் என்று அல்லா பிச்சை கூறியாதல், பெட்டியை சோதனையிட்ட பின் அனுமதித்தனர். இதேபோல், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நூர்முகமது என்ற சுயேச்சை வேட்பாளர் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய குதிரையில் வந்திறங்கினார்.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனீஸ்வரன், உரிய விண்ணப்பம் மற்றும் வேட்பு மனுவுக்கான கட்டணம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தார். பின்னர் உடன் வந்தவர்களிடம் பணத்தைத் திரட்டி வேட்புமனுவுக்கான கட்டணத்தை செலுத்தினார். தென் சென்னை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், டெபாசிட்டுக்கான 25,000 ரூபாய் தொகையையும் சில்லரையாகக் கொட்டி தேர்தல் அலுவலரை அதிர வைத்தார்.
பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமு, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலர் அறைக்குச் சென்றார். பின்னர் மனுவை பூர்த்தி செய்த அவர், நல்ல நேரம் இல்லாததால் காத்திருப்பதாகக் கூறிவிட்டு, தேர்தல் அலுவலரிடம் அனுமதிப் பெற்று வெளியில் சென்றுவிட்டார். அதன்பிறகு நல்ல நேரம் தொடங்கியவுடன் வந்து, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
