‘இனியாச்சும் எங்க அருமை புரியட்டும்’.. மனைவி,குழந்தைகள் எடுத்த விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Feb 24, 2019 12:47 PM
சென்னை ராயலா நகரில் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சென்னை ராயலா நகரின் வாடகை வீட்டுவாசி செந்தாமரை என்பவர். அண்ணா நகரில் ஒரு செல்போன் கடையில் வேலை செய்துவரும் இவருக்கு அபிதா(28) என்கிற மனைவியும் லக்ஷ்மி நாராயணன் என்கிற 12 வயது மகனும், மகாலட்சுமி என்கிற 7 வயது மகளும் உள்ளனர்.
இதில் செந்தாமரை, நேற்றைய தினம் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அண்ணா நகரின் செல்போன் கடைக்குச் சென்று வேலைசெய்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டுக்குள் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டில் இருந்த மனைவி குழந்தைகள் அனைவரும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்தான் அது. அதிர்ச்சி அடைந்த செந்தாமரை அருகில் இருந்த ராயலா நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்துபோன அபிதா மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றினர். அதுமட்டுமல்லாமல் இறப்பதற்கு முன் அபிதா எழுதியிருந்த கடிதம் ஒன்றினையும் போலீஸார் கைப்பற்றினர். அதன் பின்னர் 3 உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் அந்த கடிதத்தில், ‘எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல. என் கணவர் எங்களை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை. நாங்கள் இறந்த பிறகேனும் எங்களது அருமை அவருக்கு புரியும்’ என்று செந்தாமரையின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிறகு செந்தாமரையை விசாரித்த காவல்துறையினர், செந்தாமரைக்கும் அவரது மனைவி அபிதாவுக்கும் இடையே நிகழ்ந்த தகராறு காரணமாக உண்டான மன உளைச்சலால், அபிதா தன் குழந்தைகளுடன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.