பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு... அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம்... காத்திருப்போர் பட்டியலில் எஸ்.பி. பாண்டியராஜன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 01, 2019 01:16 PM
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்ட, கோவை எஸ்.பி. பாண்டியராஜன் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், திருநாவுக்கரசு, வசந்த குமார், ரிஷ்வந்த் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கைதுசெய்யப்பட்ட நான்கு பேரின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.ஐ.டியில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது அடையாளங்களை தெரிவிக்கும் விதமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி மற்றும் அவருடைய சகோதரன் பெயர் என செய்தியாளர்கள் சந்திப்பில், கோவை எஸ்.பி. பாண்டியராஜன் அனைத்தையும் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
இதனிடையே தமிழக போக்குவரத்து துறை ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனராகவும், டிஜிபியாகவும் இருக்கும் ஜாங்கிட், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு மிக அண்மையில் ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் நேரடி ஐபிஎஸ் பதவிகளுக்கு, பதவி உயர்வு மூலம் அதிகாரிகளை நியமிக்கக் கூடாது என்றும், போதிய ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லாத சூழலில் மட்டுமே இந்த முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், மற்றபடி முறையான சட்ட விதிகளுக்கு உட்பட்டு நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த விதிகளை அமல்படுத்தவில்லை எனில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய எஸ்.பியாக சுஜித் குமார் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக செயல்பட்டு வந்த நடேசன் மாற்றப்பட்டு, வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி டி.எஸ்.பி.யாக பணியாற்றிய ஜெயராமன் பணியிடைமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக கே.ஜி.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
