‘மிராஜ் 2000’ போர் விமானத்தைப் பார்த்து பயந்தோடிய பாகிஸ்தான் ‘எஃப்16’ விமானம்.. அதிகாரிகள் தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Feb 26, 2019 01:19 PM
இந்திய விமானப்படையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் விமானம் திரும்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை இன்று காலை அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் 12, மிராஜ் 2000 ரக விமானங்களில் 1000 கிலோ அளவிலான வெடிகுண்டுகளை பாகிஸ்தானின் எல்லையொட்டிய பயங்கரவாதிகளின் முகாம் மீது பொழிந்து தகர்த்தது.
இதனை அடுத்து பாகிஸ்தானின் உள்ளே நுழைந்து கைபர் பக்துன்வா பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தலைவர் மசூத் அசாரின் உறவினர் மற்றும் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மிராஜ் 2000 ரக இந்திய போர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்ட போது, பதில் தாக்குதல் தொடுக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் எஃப்16 ரக போர் விமானங்கள் வந்தன. ஆனால் இந்திய போர் விமானங்களின் பலத்தையும், எண்ணிக்கையும் பார்த்து சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விமானப்படை பயந்து திரும்பிச் சென்றதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.