'நடுவழியில் தவித்த பாகிஸ்தான் பயணிகள்'...நேசக்கரம் காட்டிய பஞ்சாப் காவல்துறை...நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 01, 2019 05:21 PM
ஃப்ரண்ட்ஷிப் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் உணவின்றி தவித்த பாகிஸ்தான் பயணிகளுக்கு,உணவு வழங்கிய பஞ்சாப் காவல்துறையின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாட்டை சேர்ந்த விமானங்களும் எல்லை கோட்டை தாண்டி தாக்குதல் நடத்தின.இதில் பாகிஸ்தானிய விமானமும் இந்திய விமானங்கள் இரண்டும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டார்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே கடுமையான பதற்றம் ஏற்பட்டது.இந்தியாவுக்கு இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் நேற்று திடீரென அறிவித்தது.இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இதனிடையே கராச்சியில் இருந்து நேற்று புறப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், லாகூர் வரை வந்தது. அந்த ரயிலில் இந்தியாவுக்குப் பயணித்த 16 பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். அரசிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாது எனவும் பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.
இதனிடையே நடு வழியில் இறக்கிவிடப்பட்ட பாகிஸ்தானி பயணிகள், அட்டாரி ரயில் நிலையத்துக்கு வெளியே, செய்வதறியாது திகைத்து நின்றனர்.அமிர்தசரஸ் அருகே சாப்பிடுவதற்கு கூட உணவின்றி தவித்த அவர்களுக்கு,இந்திய பஞ்சாப் காவல்துறை சார்பில் உணவு அளிக்கப்பட்டது.இந்த செய்தியை பாகிஸ்தானிய இதழான 'டான்' வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையே கடுமையான பதற்றம் நிலவிய போதும்,உணவின்றி தவித்த பாகிஸ்தானியர்களுக்கு உணவளித்த பஞ்சாப் காவல்துறையின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.