ஒருதலைக் காதலால் இளம் ஆசிரியை கொலை விவகாரம்.. கொலையாளியின் திடீர் முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Siva Sankar | Feb 24, 2019 11:24 AM
ஒரு ஆசிரியரின் இழப்பு, 1000 தலைவனின் இறப்புக்கு சமம் எனலாம். அவ்வகையில் பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரை, ஒரு தலைக் காதலால் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் குறிஞ்சிப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது 23 வயதான மகள் ரம்யா, அதே பகுதியைச் சேர்ந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியின் விருட்சம்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் ரம்யாவை ஒரு தலையாக காதலித்து வந்ததோடு, ரம்யாவின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால் ரம்யாவின் குடும்பத்தினர் ராஜசேகரின் திருமண கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகர், ரம்யா பணிபுரியும் பள்ளிக்கே சென்றுள்ளார். காலை நேரம் பள்ளிக்கு வந்து அப்போதுதான் வகுப்பறையில் இருந்த ஆசிரியை ரம்யாவை, அங்கு வந்த ராஜசேகர் திடீரென சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு ஓடியுள்ளார்.
மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ள இந்த சம்பவத்தால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ரம்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ராஜசேகரை பற்றி விசாரித்து வந்தனர். இதனிடையே ராஜசேகர் திருநாவலூர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் உடலை கைப்பற்றி போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
