'லேட்டா வந்தாலும்...பேட்ஸ்மேன்களை ஓட விட்டவர்'...ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 05, 2019 12:31 PM
தனது 30 வயதில் கிரிக்கெட்டிற்கு வந்தபோதும்,தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மேட்ச் வின்னிங் பௌலர் என்ற பெயரை எடுத்து,ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இம்ரான் தாஹிர்.அவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்த போதும் அங்கு தன்னுடைய விளையாட்டு திறனுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால்,தென்னாப்பிரிக்காவில் தஞ்சம் அடைந்து தனது கடின முயற்சியால் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்தார்.கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக தங்களின் இளம் வயதிலேயே அணியில் இடம் பிடித்து விடுவார்கள்.
குறிப்பாக ஒரு 18,19 வயதிலேயே அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் உண்டு.ஆனால் இவர் கடந்த 2011 -ம் ஆண்டு, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனபோது இவருக்கு வயது 30ஐ தாண்டி விட்டது.இருப்பினும் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதனை உண்மையாக்கி காட்டியவர்.
இவரது கூக்ளியில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து கொள்ள வேண்டும் என்பதே பேட்ஸ்மேன்களின் எண்ணமாக இருக்கும்.அந்த வகையில் முன்னணி பந்து வீச்சாளராக தனது முத்திரையை பதித்தார் இம்ரான்.விக்கெட்டை மட்டும் வீழ்த்திவிட்டால் போதும்.மைதானத்தில் இவரின் ஓட்டத்தை காண்பதற்கே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இம்ரானிற்கு,சென்னையில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து அறிவித்த இம்ரான் '' கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன் என தெரிவித்தார்.தற்போது, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் அவர் வரும் 'உலகக்கோப்பை தொடருக்குப் பின், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்'.
இம்ரான் தாஹிர் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளும், 95 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும், 37 டி20 போட்டிகளில் 62 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.