‘4 பந்துகளில் 4 விக்கெட்’.. உலக சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Feb 25, 2019 10:58 AM
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அயர்லாந்துக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அயர்லாந்து பௌலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து சிதறடித்தனர். 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஆப்கானிஸ்தான் அணி 210 ரன்கள் குவித்தது. இதில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது நபி 36 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதனை அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்கிற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் தொடர்ச்சியாக எடுத்து உலக சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் படைத்துள்ளார்.