மிரட்டிய பும்ரா.. அசத்திய விஜய் சங்கர்.. த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 05, 2019 10:11 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி அடைந்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று(05.03.2019) மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான 2 -வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதில் ரோகித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினார்.
இதற்கடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி, விஜய் சங்கர் கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. இதில் கேப்டன் விராட் கோலி 116 ரன்கள் அடித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி அடித்த 40 -வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சங்கர் 46 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கடுத்து வந்த இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. அதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபின்ஞ்ச் 37 ரன்களும், உஸ்மான் கவாஜா 38 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் ஆஸ்திரேலிய அணி மட்டுமே எடுத்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் கேதர் ஜாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.