பாதி கேப்டன் தோனிதான்.. கோலி ரொம்ப சிரமப்படுகிறார்.. கருத்து கூறிய முன்னாள் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 12, 2019 12:06 PM
இந்திய அணியின் பாதி கேப்டனாக தோனி செயல்படுகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த டி20 போட்டியில் 2-0 என்கிற கணக்கில் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. இதற்கடுத்து நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2-2 என்கிற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இதனால் நடைபெற இருக்கும் 5 -வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றும்.
முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 -வது ஒருநாள் போட்டியில் 358 என்கிற பெரிய இலக்கை வைத்தும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரரான ரிஷப் பண்ட் சேர்ப்பட்டிருந்தார்.
இதில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டை ஸ்டெம்பிங் செய்யும் போது தவறவிட்டார். இதனைக் குறிப்பிட்டு தோனி இருந்திருந்தால் நிச்சயம் விக்கெட் எடுத்திருப்பார், வீ மிஸ் யூ தோனி, என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டனர். இதனால் தோனியின் பெயர் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது.
இந்நிலையில் இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டெல்லியில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகத்தில் விருந்தளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,‘தோனி இல்லாத வெற்றிடத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 -வது ஒருநாள் போட்டியில் காணமுடிந்தது. ஒருநாள் போட்டிகளில் தோனி எப்போதும் பாதி கேப்டனாக செயல்படுவார். தோனி இல்லாததால் கோலி அன்று களத்தில் மிகவும் சிரமப்பட்டார்’ என அவர் தெரிவித்துள்ளார்.
