சமக-வின் நிலைப்பாடு இதுதான்: விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் பரபரப்பு பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 03, 2019 01:12 PM

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உண்டாகியிருக்கும் பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டிற்குச் சென்று சந்தித்தார்.

Samathuva Makkal Party Leader Sarathkumar meets DMK leader Vijayakanth

நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக-பாமக-பாஜக-புதிய தமிழகம்- என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பலமான கூட்டணியை அமைத்து இணைந்துள்ளன. அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையும் இன்னும் நீடித்தபடி உள்ளது. இன்னும் அந்த கூட்டணி முடிவு உறுதியாகாத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியதும், அவரை  ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தனித்தனியாக சந்தித்தனர். மேலும் அந்த சந்திப்புகளில் அரசியல் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தினை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,  விஜயகாந்தின் உடல் நலம் பற்றி விசாரித்துவிட்டு, தமிழக அரசியல் சூழல் மற்றும் பணம் வாங்காமல் மக்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் பற்றி பேசியதாகவும் தெரிவித்தார்.

தன்னைப் பொருத்தவரை தான் யாருடனும் இன்னும் கூட்டணி பற்றி பேசவில்லை என்றும், ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள் என்றும், நல்ல கட்சியே நாடாள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  மேலும் பேசியவர், தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை அரசியலாக்க்கக் கூடாது என்றும் ச.ம.க. தங்கள் நிலைப்பாட்டை வரும் 5-ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags : #SARATHKUMAR #VIJAYAKANTH #DMDK #SMK