‘அதிரடியாக சொமேட்டோ எடுத்த புதிய முடிவு..’ குவியும் பாராட்டுகள்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jun 04, 2019 02:04 PM

மகப்பேறு கால விடுமுறை அளிப்பதில் பெண்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ அதையே ஆண் ஊழியர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது சொமேட்டோ.

zomato introduces 26 weeks paid parental leave for men

இந்திய சட்டப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு 6 மாதங்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமேட்டோ அதன் ஆண் ஊழியர்களுக்கும் 6 மாதங்கள் பேரன்டல் லீவ் எனும் பெற்றோருக்கான விடுமுறை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், “புதிதாக குழந்தை பிறக்கும் ஆண், பெண் இருவருக்கும் சம்பளத்துடன் கூடிய 6 மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும். மேலும் ஒரு குழந்தைக்கு உதவித்தொகையாக சுமார் 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பெற்றோர் கடமை விடுமுறை (New parental leave policy) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், “சொந்த வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை இரண்டிலும் இலக்கு எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கிறதோ அப்போதுதான் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். விடுமுறை அளிப்பதில் பாகுபாடு இல்லாமல் பெண்களுக்கு வழங்கும் சலுகையை ஆண்களுக்கும் வழங்க உள்ளோம். இந்த விடுமுறை குழந்தையை தத்தெடுப்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாடகைத் தாயாக இருப்பவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 13 நாடுகளில் சேவை வழங்கி வரும் சொமேட்டோவின் இந்த அறிவிப்பு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Tags : #ZOMATO