ஏலியன்கள் இருப்பதற்கான முதற்கட்ட ஆதாரங்கள்.?.. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புகைப்படம்.. பரபரப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேம்ஸ் வெப்
பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக பொதுவாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது. இருப்பினும் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு நம்மால் இன்னும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பல வருட மர்மத்தை வெளிக்கொண்டுவரவே ஜேம்ஸ் வெப் எனப்படும் தொலைநோக்கியை 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் கோடி) செலவில் உருவாக்கியது நாசா.
கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது. இது, முன்னர் நாசாவால் அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி போல 100 மடங்கு சக்திவாய்ந்தது.
கார்பன் டை ஆக்ஸைடு
இந்நிலையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே அமைந்துள்ள ஒரு கிரகத்தில் கார்பன் டை ஆக்ஸைடு இருப்பதற்கான தெளிவான ஆதாரத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது. WASP-39 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த கிரகம் அதன் அருகில் அமைந்துள்ள விண்மீனை சுற்றிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது பூமியில் இருந்து 700 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கிறது. இது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளான வியாழனை விட 1.3 மடங்கு பெரிதானது.
மிகவும் வெப்பமான இந்த கிரகத்தில் கார்பன் டை ஆக்ஸைடு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழலாம் எனவும் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால், தற்போதைய நிலையில் அங்கு கார்பன் டை ஆக்ஸைடு இருப்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
புதிய பாதை
இதுகுறித்து பேசிய பிரான்சின் அணு ஆற்றல் ஆணையத்தின் (CEA) வானியற்பியல் வல்லுநர் பியர்-ஆலிவர் லகேஜ் "என்னைப் பொறுத்தவரை, இது சூப்பர் எர்த்ஸ் (பூமியை விட பெரிய கிரகங்கள் ஆனால் நெப்டியூனை விட சிறியது) அல்லது பூமியின் அளவிலான கிரகங்கள் பற்றிய எதிர்கால ஆராய்ச்சிக்கு புதிய பாதையை வகுத்துக்கொடுத்திருக்கிறது" என்றார். பூமியை தவிர்த்து பிற கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா? என்ற கேள்வி வெகுநாட்களாக வைக்கப்பட்டுவந்த நிலையில், சூரிய குடும்பத்துக்கு வெளியே கார்பன் டை ஆக்ஸைடு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பது ஆராய்ச்சியாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.