"மொத்த பூமிக்கும் இது பிரச்சனை தான்".. 6 மாசத்துக்கு முன்னாடி வெடிச்ச பிரம்மாண்ட டோங்கா எரிமலை.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்டோங்கா எரிமலை வெடிப்பால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
டோங்கா எரிமலை
ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான தீவுக் கூட்டம்தான் டோங்கா. இங்கே பெருமளவில் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல எரிமலைகள் அமைந்திருக்கின்றன. இவற்றுள் சில அடிக்கடி வெடித்து, கரும்புகையை வெளியிடும். அந்த வகையில் இங்குள்ள எரிமலை ஒன்று கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெடித்துச் சிதறியது. கடலுக்கடியில் இருக்கும் இந்த எரிமலை வெடிப்பினால் உலகம் முழுவதும் அதிர்வலைகள் ஏற்பட்டன.
தலைநகர் நுகு அலோபா நகரின் பெரும்பாலான பகுதிகளில் சுனாமி அலைகள் புகுந்தன. அதுமட்டும் அல்லாமல் இந்த பகுதியில் செல்போன் இணைப்புகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டன. இதனையடுத்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எரிமலை வெடிப்பினால் உண்டான ஒலியலைகள் சென்னையிலும் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்திருந்தது.
மீண்டும் சிக்கல்
டோங்கா எரிமலை வெடிப்பு ஏற்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதனால் சிக்கல் ஏற்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது இந்த எரிமலை வெடிப்பின்போது கடலில் இருந்த கணிசமான நீர் வெப்பமடைந்து நீராவியாகி வளிமண்டல மேலடுக்கிற்கு சென்றிருக்கிறது. இதனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இப்படி, 146 ட்ரில்லியன் கிராம் நீரானது வெப்பமடைந்து வளிமண்டல மேலடுக்கிற்கு சென்றிருக்கிறது. இந்த நீரைக்கொண்டு 58,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்ப முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தற்காலிகம் தான்
வளிமண்டலத்தின் மேற்பரப்பில் இருக்கும் இந்த நீராவிகள் மீண்டும் பூமியை அடைய பல ஆண்டுகள் பிடிக்கும் என்கிறது ஆய்வு முடிவுகள். இதனால் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், ஆனால் இவை தற்காலிகமாகவே இருக்கும் என்றும் நீண்ட கால வானிலை மாற்றத்துக்கு இவை வழிவகுக்க வாய்ப்பில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Also Read | சூடுபிடிக்கும் ராஜபக்சே சகோதர்களுக்கு எதிரான வழக்கு.. கறார் காட்டிய நீதிபதிகள்.. பரபரப்பில் இலங்கை..!