'ஜாலியான படகு சவாரி'... 'லைஃப்'ல இப்படி ஒரு 2 செகண்ட் யாருக்காவது வந்து இருக்கா'?... இதயத்துடிப்பை எகிற வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்வாழ்க்கையில் இதுபோன்று நமக்கு நடக்கக் கூடாது எனப் பலரும் எண்ணுவது உண்டு. அதுபோன்று நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் பீட் ஜாய்ஸ் என்பவர் வக்காமாவ் நதியில் தனது படகைச் செலுத்திக் கொண்டு செல்கிறார். அமைதியான அந்த சூழலைப் பார்க்கும் போது பார்வையாளர்களும் இதுபோன்ற ஒரு இடத்திலிருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணத் தோன்றும். ஆனால் ஒரு 2 நிமிடம் அந்த மொத்த சூழ்நிலையையும் அடியோடு மாற்றி விடுகிறது. அந்த நதியின் நீருக்கு அடியிலிருந்து ஒரு அலிகேட்டர் வகை முதலை, படகைப் பலமாக முட்டுகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத ஜாய்ஸ், நிலை தடுமாறுகிறார். படகும் பக்கவாட்டில் சாய்கிறது.
நிலைமையைப் புரிந்துகொண்ட ஜாய்ஸ் அருகில் இருக்கும் மரக் கிளைகளைப் பிடித்து மேலே எழுகிறார். அங்கிருந்து தப்பிக்க, மின்னல் வேகத்தில் துடுப்பைச் செலுத்தி வேகமாக அந்த இடத்தை விட்டுச் செல்கிறார். நெஞ்சைப் பதறவைக்கும் இந்த வீடியோவானது, ஜாய்ஸ் மார்புப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இதனிடையே நடந்த சம்பவம் குறித்து, என்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜாய்ஸ், “அந்த முதலை என்னை நோக்கி வருவதற்கு சில கணங்களுக்கு முன்னர்தான் அந்த இடத்திலிருந்து திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.
அந்த முதலை நடத்திய தாக்குதலில் என்னால் படகில் ஸ்திரமாக உட்காரவே முடியவில்லை. உண்மையில் வீடியோவில் காட்டப்படும் ஒரு தாக்குதலோடு முதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து என்னைத் துரத்தியது” எனக் கூறி பீதியைக் கிளப்பினார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்துப் பேசிய கரோலினா வனவிலங்கு உயிரியலாளர், அலிசியா டேவிஸ், ''இந்த காலம் என்பது அலிகேட்டர் முதலைகள் முட்டையிடும் நேரமாகும். முட்டையைப் பாதுகாக்க அவை மூர்க்கமாக நடந்து கொள்ளும்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஒரு பெண் முதலையாக இருக்கலாம். அது முட்டையிட்ட இடத்துக்குப் பக்கத்தில் படகு சென்றிருக்கலாம். இதனால் அச்சமூட்ட இந்த தாக்குதலை அந்த முதலை நடத்தி இருக்கலாம்'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
