'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவிலுள்ள பீட்சா கடை ஒன்றில் வேடிக்கையான ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு காரணமாக பலரும் வேலையிழந்துள்ள சூழலில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் விநோதமான திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் 26ஆம் தேதி வடக்கு கட்டாசாகுவாவில் உள்ள ஒரு பீட்சா கடைக்கு 22 வயது இளைஞரான நிகோலஸ் மார்க் என்பவர் வேலை கேட்டு சென்றுள்ளார். அப்போது அந்த கடையின் ஊழியர்களிடம் தன்னுடைய பெயர், முகவரி, செல்போன் எண் போன்றவற்றை கொடுத்து அவர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதையடுத்து திடீரென மனதை மாற்றிக்கொண்ட மார்க் கத்தியைக் காட்டி மிரட்டி, அங்கிருந்த பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். முன்னதாக நிகோலஸ் தனது முழு விவரத்தையும் பீட்சா கடையில் கொடுத்திருந்ததால் அதிக சிரமமில்லாமல் அவரை போலீசார் எளிதாக கைது செய்து, அவரிடமிருந்து பணத்தையும் மீட்டுள்ளனர். அப்போது நிகோலஸ் மார்க்கின் பையில் இருந்த கத்தி மற்றும் போதை பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கைதான நிகோலஸ் மீது திருட்டு, ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்தல், கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுதல், போதை பொருட்கள் வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தல், கைரேகையை தேடுதல் என போலீசிற்கு எந்த வேலையும் வைக்காமல் திருடனே தனது முகவரியைக் கொடுத்து விட்டு திருடிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
