இதுவரை இவ்வளவு பெரிய பிங்க் வைரத்தை நாங்க பார்த்தது இல்ல.. நிபுணர்களையே திகைக்க வச்ச வைரக்கல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய பிங்க் நிற வைரக்கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வைரம்
பூமிக்கடியில் அதிக அழுத்தத்தின் காரணமாக உருவாகும் வைரங்கள் இயற்கையாகவே அதிக கடினத்தன்மை கொண்டவையாகும். இவை பட்டை தீட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இவை புதைந்துள்ள மண்ணில் இருக்கும் ரசாயனங்களின் அடிப்படையில் இவற்றின் வண்ணமும் மாறுபடும். உதாரணமாக பிங்க், நீல நிற வைரங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றுள் ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலா தேசத்தில் இருக்கும் வைர சுரங்கங்கள் மிக பிரபலமானவை. அது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் முக்கிய வருவாயில் ஒன்றாகவும் இருக்கிறது இந்த வைர சுரங்கங்கள். இங்கே தான் தற்போது மிகப்பெரிய வைரக்கல் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
170 கேரட்
ஆப்பிரிக்காவின் அங்கோலாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரமானது கடந்த 300 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய வைரமாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அரியவகை 170 கேரட் வைரம் ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலாவில் லூகாபா டயமண்ட் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வைரம் கண்டுபிடிக்கப்பட்ட இடமான லுலோவின் பெயரால் "தி லுலோ ரோஸ்" என்று இந்த வைரம் பெயரிடப்பட்டிருக்கிறது.
இது உலகளவில் இதுவரை மீட்கப்பட்ட மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரங்களில் ஒன்றாக இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அங்கோலா நேஷனல் டயமண்ட் டிரேடிங் கம்பெனி நடத்தும் டெண்டர் மூலம் "தி லுலோ ரோஸ்" விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெருமை
அங்கோலாவின் கனிம வளத்துறை அமைச்சர் டயமன்டினோ அஜீவதோ (Diamantino Azevedo) இதுபற்றி பேசுகையில்,"வைர சுரங்க தொழிலில் அங்கோலா முக்கியமான நாடாக இருப்பதை இந்த கண்டுபிடிப்பு நிரூபித்திருக்கிறது. இது வைர சுரங்கத் தொழிலில் நமது அர்ப்பணிப்பு மற்றும் முதலீட்டிற்கான சாத்தியம் ஆகியவற்றை விளக்குகிறது" என்றார்.
இந்நிலையில், லூகாபா டயமண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டீபன் வெதெரால் இதுபற்றி பேசுகையில்,"வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பால் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இதன்மூலம் எங்களது முயற்சியை அதிகரிக்க இருக்கிறோம்" என்றார்.