'சத்தியமா சொல்லுங்க, மேல என்னதான் நடக்குது'... 'தாலிபான் துணை பிரதமருக்கே இந்த கதியா'?... 'இதுக்கா துப்பாக்கியை தூக்கிட்டு உங்க பின்னாடி வந்தோம்'... அதிர்ச்சியில் வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் இவ்வளவு கொடூரமானவர்களா என நினைக்கும் அளவுக்குத் தினம் தினம் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள். இடைக்கால அரசை அறிவித்த தாலிபான்கள் எந்த பதவிக்கு யார் என்பதை தீர்மானிப்பதில் பெரும் சிக்கலைச் சந்தித்து வந்தார்கள். பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் பதவிகளைப் பிடிப்பதில் அவர்களுக்குள் பெரும் போட்டி நிலவி வந்தது.
20 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளதால் எப்படியாவது பதவிகளை பெற்று விட வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக இருந்தது. இந்நிலையில் தாலிபான்களின் துணைப் பிரதமர் முல்லா அப்துல் பரதார் பதவி சண்டை காரணமாக தாலிபான்களாலேயே கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்களின் நிறுவன உறுப்பினர்களுக்கும் ஹக்கானி குழுவினருக்கும் இடையே கருத்து மோதலால் முல்லா பரதார் முக்கிய பொறுப்புகளிலிருந்து ஏற்கனவே அவர் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தாலிபான் வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே துணைப் பிரதமர் முல்லா பரதார் நலமாக இருப்பதாகக் கூறி, அவரே பேசியதாக ஒரு குரல் பதிவும், கைப்பட எழுதியதாகக் கூறி ஒரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஊடகங்களே தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாக தாலிபான்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தங்களிடையே எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை எனவும், முல்லா பரதார் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் முக்கிய தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தாலிபான்கள் தங்களின் புதிய அரசாங்கம் தொடர்பாகக் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு, அதில் முல்லா பரதார் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்ததாகத் தகவல் வெளியானது. இதனால் தற்போது வெளியாகியுள்ள ஆடியோ குறித்த உண்மைத் தன்மை நிச்சயம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது என ஆப்கான் விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் முதன் முறையாக கத்தார் நாட்டிலிருந்து அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் குழு காபூல் நகருக்கு வந்த நிலையில், அப்போது துணைப் பிரதமரான முல்லா பரதார் பங்கேற்கவில்லை என்பதும், அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.
முல்லா பரதார் தாலிபான்களின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமின்றி, தாலிபான்களின் முதல் உச்ச தலைவரான முல்லா உமருக்கு நெருக்கமானவராகவும் தாலிபான்களின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2013ல் காசநோய் காரணமாக முல்லா உமர் மரணமடைய, தாலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவராக பரதார் பொறுப்பேற்றார்.
ஆனால் ஹக்கானி குழுவினருடன் எப்போதும் ஒரு மோதல் போக்கையே முல்லா பரதார் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. ஆட்சியைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் தாலிபான் வீரர்கள் இருந்த நிலையில், அவர்களின் மேல்மட்ட தலைவர்களிடையே நிலவிய பதவி சண்டை அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
தற்போது தாலிபான்களின் துணைப் பிரதமரைத் தாலிபான்களே கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கீழ்மட்டத்தில் பணிபுரியும் வீரர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.