30 நிமிஷமா படகையே நடுங்க வச்ச ராட்சச மீன்.. போரடிக்குதுன்னு கடலுக்கு போனவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. ஒரே நாள்ல மாறிய வாழ்க்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மீனவ குழு ஒன்று ராட்சச ப்ளூ மார்லின் மீனை பிடித்துள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
கடல் பயணம்
மீன் வேட்டைக்காக நாள் கணக்கில் கடலில் பயணம் செய்யும் குழுக்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. பயணத்திற்கு தேவையான பொருட்களுடன் கடலுக்குள் செல்லும் இவர்கள், பொருளாதார ரீதியில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் வரையில் தங்களது வேட்டையை தொடர்வார்கள். அப்படி தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 3 பேர்கொண்ட குழு ஒன்று அட்லாண்டிக் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருக்கிறது.
ஆப்பிரிக்காவின் வெர்டி தீவுப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பிரம்மாண்ட மீன் ஒன்று வலையில் சிக்கியதை உணர்ந்திருக்கிறார்கள் இந்த குழுவினர். சுமார் 30 நிமிடங்களுக்கு மொத்த படகையும் நடுங்க வைத்த அந்த மீன் அதிக எடை இருக்கலாம் என அவர்கள் நினைத்திருக்கின்றனர். ஆனால், அன்றைய தினம் தங்களது வாழ்க்கையிலேயே மிக முக்கியமான நாளாக இருக்கும் என அவர்கள் அப்போது நினைத்திருக்கவில்லை.
சர்ப்ரைஸ்
ரியான் ரூ வில்லியம்சன் எனும் பிரபல கேப்டனை கொண்ட Smoker எனப்பெயரிடப்பட்ட இந்த மீன்பிடி படகு, சுமார் 30 நிமிடங்களாக ராட்சச மீனை கட்டுப்படுத்த முடியாமல் போராடியிருக்கிறது. இறுதியாக, அதிலிருந்த மீனவர்கள் துரிதமாக செயல்பட்டு, வலையை மேலே இழுத்தபோதுதான் உள்ளே ராட்சச ப்ளூ மார்லின் என்னும் மீன் இருப்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
621 கிலோ எடை இருந்த இந்த மீன், 12 அடி நீளமும், 3 அடி அகலமும் இருந்திருக்கிறது. மேலும், அட்லாண்டிக் கடலில் பிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ப்ளூ மார்லின் இதுதான் என நிபுணர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சாதனை
இதற்கு முன்னர், 1992 ஆம் ஆண்டு பிரேசிலில் பிடிக்கப்பட்ட 1,402 பவுண்டு எடையுள்ள மீன் தான் இதுவரை அட்லாண்டிக் கடலில் பிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய ப்ளூ மார்லின் மீனாகும். அதன் பிறகு தற்போது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மீனவர்கள் பிடித்த இந்த மீன் அந்த வரிசையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
6 நாள் கடற்பயணத்தில் தங்களுக்கு மிகப்பெரிய ப்ளூ மார்லின் மீன் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளனர் இந்த படகில் சென்ற மீனவர்கள்.