"அதுமட்டும் நடந்துட்டா நம்மகிட்ட ஒரு சாட்லைட் கூட மிஞ்சாது"..குண்டை தூக்கிப்போட்ட ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளியில் பல லட்சம் கோடி மதிப்பில் செயற்கை கோள்களை உலக நாடுகள் அனுப்பியுள்ளன. ஆனால், சூரியனால் இந்த செயற்கை கோள்கள் பாதிப்படையலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய நட்சத்திரமான சூரியன் தற்போது தனது 11 வது சூரிய சுழற்சியில் உள்ளது. அணுக்கள் ஒருங்கிணைவதால் உருவாகும் கணிசமான வெப்பமே சூரியன் தொடர்ந்து ஒளிர காரணமாக அமைந்திருக்கிறது. இந்த அதீத வெப்பம் காரணமாக சில சமயங்களில் சூரியனின் வெளிப்புற பரப்பில் இருந்து வெடிப்பு ஏற்பட்டு சூரிய துகள்கள் மற்றும் மின்காந்த அலைகள் பிற கிரகங்களை நோக்கி தள்ளப்படும். இதனை கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்கிறார்கள். மேலும் இது சூரிய புயல் எனவும் அழைக்கப்படுகிறது.
செயற்கை கோள்கள்
இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகமையை சேர்ந்த ஆய்வாளர்கள், பூமியை சுற்றி காந்தப்புலம் வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த 4, 5 ஆண்டுகளில் செயற்கை கோள்கள் வருடத்திற்கு 1.5 மைல்கள் சுற்றுப்பாதையில் இருந்து விலகிவிட்டதாகவும் இது நவம்பர், டிசம்பர் மாதங்களில் 20 கிலோமீட்டராக உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
புதிய சூரிய சுழற்சி காரணமாக இவை நடந்திருக்கலாம் எனவும், மேலும், சூரியனில் இருந்து வெளிவரும் புயல்கள் இதனை துரிதப்படுத்தலாம் எனவும் எச்சரித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து பேசிய ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகமையை சேர்ந்த டாக்டர் ஸ்ட்ரோம்," சூரியக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாத சிக்கலான இயற்பியல் நிறைய உள்ளது. சூரியனில் இருந்து வெளிவரும் இந்த அடர்த்தியான காற்று அதிக உயரத்திற்கு எழுகிறது. இது செயற்கை கோள்களை அதன் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலக்குகிறது" என்றார்.
தாக்கம்
கடந்த மே மாதத்தில் செயற்கை கோள்கள் நம்ப முடியாத அளவு சூரிய புயலால் தாக்கப்பட்டதாகவும் அதனால் அவற்றின் உயரத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உயர்த்தியிருப்பதாகவும் குறிப்பிட்ட டாக்டர் ஸ்ட்ரோம்,"புதிய ரக செயற்கை கோள்கள் உந்துவிசை அமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. அதாவது இவற்றின் ஆயுள் மிகக்குறைவு. இருப்பினும் சூரியனின் தாக்கம் குறையும்போது அவை மீண்டும் சுற்றுவட்ட பாதைக்கு திரும்பும்" என்றார்.
இருப்பினும், இந்த சூரிய புயலால் நல்ல விஷயமாக விண்வெளியில் மிதக்கும் குப்பைகள் விண்வெளியில் இருந்து அகற்றப்படும் எனவும் டாக்டர் ஸ்ட்ரோம் தெரிவித்திருக்கிறார்.
