WILL SMITH : “அவரை ஏன் வில் மாமா அடிச்சீங்கனு கேட்டான்.. அன்று இரவே தூக்கமே வரல”.. ஆஸ்கர் மேடையில் வைத்து ‘அறைந்த சம்பவம்’ குறித்து வில் ஸ்மித் வருத்தம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ராக்கை அறைந்தது குறித்து வில் ஸ்மித் மீண்டும் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
Also Read | நெஹ்ரா பின்னாடி ஒளிஞ்சு நின்ன இந்திய வீரர்.. அடுத்த நிமிஷமே நடந்த சம்பவம்.. "சேட்ட புடிச்ச ஆளா இருப்பாரோ?
94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த மார்ச் 27-இல் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் நடிகர் வில் ஸ்மித். அப்போது அந்த விருது விழாவைத் தொகுத்து வழங்கியவர் கிறிஸ் ராக். அவரது கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்த சம்பவம்தான் உலகம் முழுவதும் சர்ச்சை ஆனது.
அலோபீசியா என்கிற நோய்த் தாக்கத்தால் வில் ஸ்மித்தின் மனைவி ஜேடாவுக்கு முடி கொட்டத் தொடங்கியிருந்ததையும், அதன் காரணமாக தலையை மொட்டை அடித்துக் கொண்டதையும், குறிப்பிட்டு பேசிய கிறிஸ் ராக் சற்றே கிண்டலான தொனியில் நகைச்சுவையாக பேச, அப்போது விளையாட்டாக அறைய தொடங்கி, சீரியஸாக அறைந்த வில் ஸ்மித், தன் மனைவி பெயரை இழுக்க வேண்டாம் என ஆவேசமாக சொல்லிவிட்டார். ஆனால் அதன் பின்பும் அதற்கான விளக்கத்தையும், அதே மேடையில் குறிப்பிட்ட வில் ஸ்மித், அதற்காக மன்னிப்பும் கேட்டார். இதனை அடுத்து அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் உறுப்பினர் பதவியிலிருந்து நடிகர் வில் ஸ்மித், ராஜினாமா செய்ய, ஆஸ்கர் அகாடமி அவர் மீது நடவடிக்கையும் எடுத்தது.
இந்த சூழ்நிலையில்தான், தான் நடித்த `Emancipation' திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாவதை ஒட்டி பேசியுள்ள வில் ஸ்மித், ஆஸ்கர் விருது விழாவில் தான் நடந்துகொண்ட விதத்தால் தனது தற்போதைய இந்த படம் பாதிக்கப்படலாம் என்றும், கிறிஸ் ராக்கை அறைந்த அன்றைய இரவு மிகவும் கொடூரமாக இருந்ததாகவும், எனினும் அதை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அன்று வீட்டுக்குச் சென்றவுடன், தன் வீட்டில் இருந்த 9 வயது சிறுவன், “அவரை ஏன் அடிச்சீங்க வில் மாமா?” என கேட்டதாகவும், அந்த கேள்வியை கேட்டதும், ஒரு மனிதனாக தன்னைத் தானே வெறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசியுள்ளவர், தான் செய்த இந்த வெறுக்கத்தக்க செயலால், மக்கள் தனது திரைப்படங்களை பார்க்க தயாராக இல்லை என்று முடிவெடுத்தால், அதை தான் முழுவதுமாக மதிப்பதாகவும் ஏற்பதாகவும் தெரிவித்தவர், அதே சமயம் தனது செயலால், தன்னை வைத்து படமெடுத்த படக்குழுவினர் எந்த விதத்திலும் பாதிப்புக்குள்ளாக கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.