"பிறந்த குழந்தைக்கு பேரு பகோடாவா?"- வைரலான வேடிக்கை சம்பவத்தின் சுவாரஸ்ய பின்னணி
முகப்பு > செய்திகள் > உலகம்பிறந்த குழந்தைக்கு பிரபலமான நபர் அல்லது ஒரு இடத்தின் பெயரை சூட்டி பார்த்திருப்போம். ஆனால் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைக்கு பகோடா என பெயர் வைத்துள்ளதாக கூறப்பட்டதை அடுத்து இந்த விசயம் வைரலாகி வருகிறது.
ஆம், இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைக்கு தம்பதியர் ஒருவர் பிரபல இந்திய உணவான பகோடா எனும் பெயரை வைத்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, அயர்லாந்தில் உள்ள நியூ டவுன்பேயில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்திற்கு அடிக்கடி வரும் ஒரு தம்பதியினர் அந்த உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவை விரும்பி உண்டதாகவும், அந்த உணவின் பெயரைத்தான் பிறந்த குழந்தைக்குப் பெயராக வைத்ததாகவும் அந்த உணவகத்தின் உரிமையாளராக இருந்த பெண்மணி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
சரி, அந்த இங்கிலாந்து உணவின் பெயராகத்தான் இருக்கும் என்று பலரும் யோசிக்க, ஆனால் அந்த உணவகத்தில் அவர்கள் விரும்பி சாப்பிடும் 'பகோரா' என்பதே அந்த உணவின் பெயர் என அந்த உணவகம் குறிப்பிட்டது. நம்மூரில் மழை பெய்தால் டீயுடன் சேர்த்து சாப்பிட மழைக்காலங்களில் நாம் உண்ணும் பகோடாவை அந்த ஊரில் பகோரா என அழைக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த குழந்தையின் தாய் இந்த பகோராவை அதிகம் விரும்பி சாப்பிட்டதால் குழந்தைக்கு இப்படி பெயர் வைத்ததாக அந்த உணவகம் அந்த பதிவில் குறிப்பிட்டது.
இதைப்பார்த்த இந்தியர்கள் பலரும் தத்தம் குழந்தைக்கு சிக்கன் டிக்கா, பனானா பாப்சிகல், தக்காளி சாஸ் என தங்களுக்கு பிடித்த உணவை பெயராக வைத்துள்ளதாக வேடிக்கையாக பதிவிட, மீண்டும் அந்த உணவகத்தின் பதிவை பற்றி இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தீர விசாரித்து உண்மைத் தன்மையை வெளியிட்டது.
அதன்படி உணவுப்பொருட்களின் விலையுயர்வால் அந்த உணவக உரிமையாளர் பதிவிட்ட ஒரு ஜோக்தான் அந்த பதிவாம். உண்மையில் அந்த குழந்தை அந்த உணவக உரிமையாளரின் பேத்தியாம். அத்துடன் தனக்கு பிடித்த பகோடாவை சேர்த்து, பில் விலைப்பட்டியல் அதிகமாக இருப்பதற்கு காரணம் விலைவாசி ஏற்றம் என்பதை குறிக்கும் விதமாக பில்லையும் சேர்த்து அந்த உணவக உரிமையாளர் பதிவிட்டாராம்.