'பரிதாபமாக உயிரிழந்த 19 வீரர்கள்!'.. 'சொந்த நாட்டு கப்பலின் மீது நடந்தேறிய ஏவுகணைத் தாக்குதல்!'.. உலகை அதிரவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஓமன் வளைகுடாவின் கடற்பரப்பில் ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது.

இந்த பயிற்சியில் ஏவுகணை தாங்கிய போர் கப்பல்களும் ஈடுபட்டிருந்த நிலையில், போர்க்கப்பல்கள் கடல் பரப்பில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இலக்குகளை தாக்கி அழிக்கும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது கொனார்க் என்னும் போர் கப்பலிலிருந்து, கடலில் நிலைநிறுத்தப்பட்ட இலக்கை தாக்கி அழிக்கும் நோக்கிலான ஏவுகணை ஒன்று துறைமுகப் பகுதியில் நடைபெற்று கொண்டிருந்த இந்த பயிற்சியின்போது ஏவப்பட்டது.
ஆனால் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்த போர்க்கப்பலின் ஏவுகணையானது, குறிவைத்த இலக்கை அழிக்காமல் தவறுதலாக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இன்னொரு சொந்த நாட்டு போர்க்கப்பலையே சென்று தாக்கியுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக இந்த ஏவுகணை தாக்குதலில் கடற்படையை சேர்ந்த 19 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் போர்க்கப்பலில் பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்பை அடுத்து விபத்து சம்பவத்துக்கான காரணம் குறித்து ஈரான் கடற்படை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சொந்த நாட்டு கப்பலின் மீது தவறுதலாக ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவம் உலக நாடுகளை வியப்பிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட்ட போர்க் கப்பலான கோனாரக், 447 டன் எடையும், 47 மீட்டர் நீளமும் உடையது. 1988 முதல் ஈரான் கடற்படையில் செயல்பாட்டில் உள்ளது. ஏற்கெனவே ஈரான் கடல் பகுதியில் பதற்றம் நிலவி வகுகிறது. பாரசீக வளைகுடாவில் வலம் வரும் அமெரிக்கப் போர்க் கப்பல்களுக்கு ஈரானிய போர்க் கப்பல்கள் நெருக்கடியைத் தருவதாகவும், அவ்வாறு ஈரானியக் போர்க் கப்பல்கள் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டுக் கப்பற்படைக்கு சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டார்.
இதற்கு, ''அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் பாரசீக வளைகுடாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க கப்பல்களும் தரைமட்டமாக்கப்படும்'' என்று ஈரானின் புரட்சிகர காவலாளிப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹூசைன் சலாமி எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
