இந்து தந்தை - இஸ்லாமிய தாய்க்கு பிறந்த குழந்தை.. முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ்.. அசத்திய யுஏஇ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 29, 2019 10:53 AM

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் முதன்முறையாக, இந்து மதத்தவரை திருமணம் செய்த இஸ்லாமியப் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

girl child of hindu dad muslim mother gets birth certificate in uae

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரண் பாபு என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்து 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், வேலைக்காக ஐக்கிய அமீரக நாடுகளின் தலைநகரான அபுதாபி நகரில் தனது மனைவியுடன் சென்று குடியேறினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்குள்ள ஒரு மருத்துவமனையில் இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இஸ்லாமிய தாய்க்கு பிறந்த அந்தக் குழந்தையின் தந்தை இந்து என்பதால், அக்குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் அளிப்பதற்கு மருத்துவமனை மறுத்துவிட்டது.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய ஆண் பிற மதத்தை சேர்ந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதேவேளையில், ஒரு இஸ்லாமியப் பெண் பிற மதங்களைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது.

இதையடுத்து கிரண்பாபு, 'தனக்கு அபுதாபி விசா உள்ளதால், இங்குதான் காப்பீடு உள்ளது. எனவே, தனது மனைவியை இங்குள்ள மிடியோர் என்ற மருத்துவமனையில் அனுமதித்தேன். ஆனால், குழந்தை பிறந்தப்பிறகு, நான் இந்து என்பதால் தனது குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தரமறுத்துவிட்டனர். தனது மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நான்கு மாதங்கள் நிலுவையில் இருந்து பின்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த கால கட்டம் மிகவும் மன உளைச்சலாக இருந்ததாக கிரண்பாபு தெரிவித்துள்ளார். தாங்கள் இந்தியா திரும்புவதற்கு இந்தியத் தூதரகம் உதவி புரிந்தது. ஆனால், குழந்தைக்கு எந்த ஆவணங்களும் இல்லாததால், குழந்தை வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த 2019-ம் ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக, ஐக்கிய அரபு அமீரகம் கடைப்பிடிக்கிறது. அரசு அளித்த இந்த சலுகையை பயன்படுத்தி நீண்ட, நெடிய போராட்டத்துக்குப் பின்னர், அரசின் பொதுமன்னிப்பு முறையில், தற்போது தங்களின் மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளனர் கிரண்பாபு தம்பதியினர்.

ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்புச் சான்றிதழ் கிடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #UAEBIRTHCERTIFICATE #MUSLIMMOTHER #HINDUFATHER