மொத்த உலகத்தையும் நடுங்க வைக்கும் பால்டிக் கடல்.. "விளைவுகள் கொஞ்ச நாள்ல தெரியும்".. பகீர் கிளப்பிய ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பால்டிக் கடலில் உள்ள Nord Stream எரிவாயு குழாயில் நான்காவது முறையாக வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக சுவீடன் அரசு அறிவித்திருக்கிறது. இது உலக அளவில் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துவருகின்றனர்.

பால்டிக் கடல்
உலக பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஒரு பகுதிதான் இந்த பால்டிக் கடல். ரஷ்யா, டென்மார்க், போலந்து, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே இந்த கடல் பரவியுள்ளது. ரஷ்யாவின் எரிவாயு குழாய் இந்த கடல் வழியே ஐரோப்பாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக டென்மார்க் அதிகாரிகள் இந்த வார துவக்கத்தில் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த குழாயில் நான்காம் வெடிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக சுவீடன் கடலோர பாதுகாப்புப்படை தெரிவித்திருக்கிறது.
எரிவாயு குழாய்
ரஷ்யா - டென்மார்க் இடையே 1220 கிலோமீட்டர் நீளும் இந்த நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன்-ல் மொத்தம் நான்கு இடத்தில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுமார் ஒருகிலோமீட்டருக்கு கடல் கொந்தளிப்புடன் இருப்பதாக டென்மார்க் ஆயுதப்படை அறிவித்துள்ளது. மேலும், இந்த வெடிப்பு நடந்திருக்கும் அருகில் செல்லவேண்டாம் எனவும் டென்மார்க் கடற்படை அறிவுறுத்தி வருகிறது. முன்னதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இதுபற்றி பேசுகையில், "நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் கசிவுகள் நாசவேலையால் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பிய எரிசக்தி உள்கட்டமைப்பை வேண்டுமென்றே சீர்குலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பதிலடி தரும் சூழ்நிலையை உருவாக்கும்" என எச்சரித்திருந்தார்.
மீத்தேன்
இந்நிலையில், இந்த எரிவாயு குழாயில் ஏற்பட்டிருக்கும் கசிவால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் தலைவர் மார்சியா மெக்நட் இதுபற்றி பேசுகையில்," எரிவாயு குழாயில் இருந்து வெளியேறும் மீத்தேன் ஒரு பசுமை இல்ல வாயு. இது வெப்பமயமாக்கலை உருவாக்குவதோடு, கடல்சார் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏற்கனவே புளோரிடா உள்ளிட்ட மாகாணங்கள் வெப்பமண்டல புயல்களினால் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இதுபோன்ற மீத்தேன் கசிவு காற்றுமண்டலத்தை மேலும் வெப்பமாக்கும்" என்றார்.
மேலும், காலநிலை மாற்றத்தில் இதன் பங்கு எப்படியிருக்கும் என தற்போது கூற முடியாது எனவும், ஆனால் இதே நிலைமை தொடர்ந்தால் விளைவுகள் மோசமாகும் எனவும் அவர் எச்சரித்திருக்கிறார். பால்டிக் கடலில் ஏற்கனவே எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும், இரண்டு இடங்களில் வெடிப்பு ஏற்பட்டிருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மற்ற செய்திகள்
