'காசை வச்சிட்டு நடையை கட்டுங்க'... 'தலை சுற்ற வைத்த பிணைய தொகை'... ஒரு வழியா காசை கொடுத்து பஞ்சாயத்தை முடித்த 'எவர்கிவன்' நிர்வாகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்‘எவர்கிவன்’ கப்பலை சூயஸ் கால்வாய் அருகே உள்ள ஒரு ஏரியில் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டது.

'எவர்கிவன்' இந்த பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. கொரோனா எந்த அளவிற்கு உலகம் முழுவதும் தினசரி பேசு பொருளாக மாறியதோ, அந்த அளவிற்கு எவர்கிவன் கப்பல் குறித்த பேச்சும் பரவலாகக் காணப்பட்டது. சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது சூயஸ் கால்வாய்.
இந்த கால்வாயில் கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாகத் தரை தட்டி நின்றது. இதன் காரணமாகச் சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. உலக நாடுகள் பலரும் பதறிப் போனது. ஏற்கனவே கொரோனா காரணமாகப் பொருளாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், எவர்கிவன் கப்பல் சிக்கியதால் மீண்டும் பொருளாதாரம் பெரிய பாதிப்பைச் சந்திக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு வாரக் கால முயற்சிக்குப் பிறகு ‘எவர்கிவன்’ கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இருந்தாலும் கப்பல் தரை தட்டி நின்ற காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வழங்கும் வரை கப்பலை விடமாட்டோம் என ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசென் கைஷாவிடம் சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது.
கப்பல் நிர்வாகம் எவ்வளவோ கோரிக்கைகளை முன்வைத்த நிலையிலும், தனது நிலைப்பாட்டில் மிகவும் கறாராக இருந்தது சூயஸ் கால்வாய் ஆணையம். இதையடுத்து ‘எவர்கிவன்’ கப்பலை சூயஸ் கால்வாய் அருகே உள்ள ஒரு ஏரியில் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டது. சுமார் 916 மில்லியன் அமெரிக்க டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 ஆயிரத்து 836 கோடி) இழப்பீடாக சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்டது.
ஆனால் சூயஸ் கால்வாய் ஆணையம் அதிகப்படியான தொகையைக் கேட்பதாக எவர்கிவன் கப்பல் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இதையடுத்து இருவருக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இறுதியாக இழப்பீட்டுத் தொகையை 550 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.4 ஆயிரத்து 108 கோடி) வரை சூயஸ் கால்வாய் ஆணையம் குறைத்துக் கொண்டது.
இந்த நிலையில் சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா ஒப்புக் கொண்டார். இது தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, 3 மாதங்களுக்குப் பிறகு ‘எவர்கிவன்’ கப்பலை சூயஸ் கால்வாய் ஆணையம் நேற்று விடுவித்தது.
இதையடுத்து அந்த கப்பல் நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக சூயஸ் கால்வாயில் நிலவி வந்த பரபரப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
