நேரா மின் கம்பத்தில் சென்று மோதிய விமானம்.. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்!!..
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் மேரிலேண்ட் என்னும் மாகாணத்தில், மொவ்ண்ட்கொமெரி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ஹைதுர்பர்க் என்னும் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று அப்பகுதியில் அரங்கேறி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி ஒன்றின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதி உள்ளது. 2 பேர் பயணம் மேற்கொண்ட சிறிய ரக விமானம், மின் கம்பத்தில் மோதியதுடன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற சூழலில், மற்றொரு அதிர்ச்சி அப்பகுதி மக்களுக்கு காத்திருந்துள்ளது.
மின் கம்பத்தின் மீது விமானம் மோதியதால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, 90,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் தடை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
மின்சாரம் தடைப்பட்டதன் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு பணியினர் விரைந்து வந்து சுமார் நூறு அடிக்கு இடையே சிக்கி இருக்கும் அந்த விமானத்தை கீழே விழாமல் இருக்கும் வகையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல விமானத்தில் இருந்த இரண்டு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வேறு வழிகளில் அந்த நகர மக்களுக்கு மின்சாரம் வழங்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் பனிமூட்டமான வானிலை, நிலைமைகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது என்றும் மீட்பு குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக விமானம் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி சுமார் 90 ஆயிரம் வீடுகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.