'எனக்கு பெண் குழந்தை தான் வேணும்'... 'விடாப்பிடியா இருந்தும் பிறந்த 14 ஆண் குழந்தைகள்'... '15வது முறை கர்ப்பமான மனைவி'... காத்திருந்த ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த காலத்திலும் 14 குழந்தைகளா எனப் பலரும் ஆச்சரியப்படும் நிலையில், எனக்குப் பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் ஒரு பெற்றோர் எடுத்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வேகமான வாழ்க்கைச் சூழலில் ஒரு குழந்தையைப் பெற்று, அதை வளர்ப்பதே பெரும் கஷ்டமாக இருக்கிறது எனப் பலரும் புலம்புவதைக் கேட்க முடியும். ஆனால் பெண் குழந்தை வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அமெரிக்கத் தம்பதி எடுத்த முயற்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி கத்தேரி - ஜே ஸ்ச்வான்ட். இருவரும் தீவிரமாகக் காதலித்து, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக முதலில் ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. ஆனாலும் தங்களுக்குப் பெண் குழந்தை வேண்டுமென்று இருவரும் மிகவும் ஆசைப்பட்டிருக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள் அனைத்தும் ஆண் குழந்தைகளாகவே பிறந்தன. ஆனால் எங்களுக்கு நிச்சயம் பெண் குழந்தை வேண்டும் என்பதில் மட்டும் இருவரும் உறுதியாக இருந்த நிலையில், அந்தத் தம்பதி வரிசையாகக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். இதனால் அந்த ஊர் மக்களின் பார்வை முழுவதும் இந்த தம்பதி மீது திரும்பியது. தொடர்ந்து இந்த தம்பதிக்குக் குழந்தை பிறந்த நிலையில் அனைத்தும் ஆண் குழந்தைகளாகவே இருந்தது.
இதற்கிடையே ஜே - கத்தேரி தம்பதியின் வளர்ந்த ஆண் குழந்தைகள் அனைவரும் ஒன்றிணைந்து '14 Outdoorsmen' என்கிற இணையப்பக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் தங்களைப் பற்றியும், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளைப் பற்றியும் அவர்கள் பதிவிட்டு வந்தார்கள். இதனால் மக்கள் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்து இருக்கிறதா என்பதை, பலரும் அந்த தளத்தில் போய் அவ்வப்போது பார்ப்பது உண்டு.
இந்த சூழ்நிலையில் அந்த தம்பதி எதிர்பார்த்தது போலவே, அவர்களுக்கு ஒரு குட்டி தேவதை ஒன்று மகளாகப் பிறந்துள்ளது. கத்தேரி - ஜே ஸ்ச்வான்ட் தம் தம்பதிக்கு தற்போது 45 வயது ஆகும் நிலையில், 15வது குழந்தையாக அந்த இளவரசி வந்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜே - கத்தேரி தம்பதியரின் 28 வயது மூத்த மகன் டைலர், ''எங்கள் அம்மாவைத் தவிர நாங்கள் அனைவரும் ஆண்கள் தான். எங்கள் வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகளான நாயும் ஆண் தான். அதனால் எங்கள் வீட்டில் பிங்க் நிறத்தின் பயன்பாடு இல்லாமலேயே இருந்தது. ஆனால், இந்த தேவதையின் வருகையால் இனி பிங்க் நிறத்துக்கு வேலை வந்துவிட்டது.
ஏழு பவுண்டு எடையுடன் பிறந்திருக்கும் எங்கள் தேவதைக்கு மேகி ஜேனி என்ற பெயர் சூட்டியிருக்கிறோம். அவள் 14 அண்ணன்களின் பாச பிணைப்பில் வளருவாள்'' என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், டாடி லிட்டில் பிரின்சஸ் என பெண் குழந்தைகளைக் கூறுவது உண்டு. ஆனால் இந்த பெண் குழந்தை உண்மையிலேயே அண்ணன்களின் லிட்டில் பிரின்சஸ் ஆக இருப்பாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.