'தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க இது தான் ஒரே வழி'... 'மனசை கல்லாக்கி கொண்டு இளம்பெண்கள்'... பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து பெண்களின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தாலிபான்களுக்கு எதிரான 20 வருடப் போரை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்த நேரத்திலிருந்து தாலிபான்கள் தங்கள் ஆதிக்கத்தை ஆரம்பித்து விட்டார்கள். கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்க ராணுவம் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய நிலையில், நாங்கள் முழு சுதந்திரம் அடைந்து விட்டோம் எனத் தாலிபான்கள் அறிவித்தார்கள்.
இதற்கிடையே இனிமேல் ஆப்கானிஸ்தானில் வாழ முடியாது மக்கள் முடிவு செய்த நிலையில், அனைத்து உலக நாடுகளும் தங்கள் நாட்டுக் குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தன. இதனால் தாலிபான்களுக்குப் பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் கூடினர். முடிந்தால் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று மன்றாடினார்கள்.
இந்நிலையில் ஆண் குடும்ப உறுப்பினர்களின் துணை இல்லாத பெண்களின் பயணத்தைத் தாலிபான்கள் தடை செய்தனர். இதனால் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பல பெண்கள் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு, அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தகுதியுடையவர்களாக ஆக்கப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக முகாம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் பெண்களின் குடும்பங்களில் சிலர் தாலிபான்களிடம் இருந்து தப்பிக்கத் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தினர் எனப் பிரபல ஆங்கில ஊடகமான CNN தெரிவித்துள்ளது. மேலும் தப்பிக்க உதவுவதற்காக, தங்கள் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக அல்லது கணவர்களாகக் காட்டிக்கொள்வதற்காக, நாட்டைவிட்டு வெளியேற விருப்பமுள்ள சில ஆண்களுக்கு அந்த குடும்பங்கள் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரத்திற்கு நடத்தப்படும் போரில் இறுதியில் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகளும், பெண்களும் மட்டும் தான்.