23 மாதக் குழந்தைக்காக கார்ட்டூன் பாத்திரங்களாக மாறி சென்ட்ஆஃப் செய்த மருத்துவர்கள்..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | May 21, 2019 11:27 AM
‘டிஸ்னி பிரின்சஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த எம்மா என்ற குழந்தை தனது 23 மாத தொடர் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளது.
ஜூன் 20, 2017-ஆம் ஆண்டு பிறந்த எம்மாவுக்கு பிறக்கும்போதே உடல் வளர்ச்சிக் குறைபாடு இருந்துள்ளது. பிறந்த ஆறு வாரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் அந்தக் குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளது. எம்மாவின் இந்த 23 மாதங்கள் பெரும்பாலும் மருத்துவமனை சிகிச்சையிலேயே கழிந்துள்ளது.
கடந்த மாதம் முதுகுத் தண்டில் செய்யப்பட்ட 5 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை படிப்படியாகக் குணமடைந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அந்தக் குழந்தையை சந்தோஷமாக வழியனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளனர். எம்மாவுக்கு மிகவும் பிடித்த டிஸ்னி பிரின்சஸ் போல மலர்கள், உடைகளை அணிவித்து கிரீடம் மற்றும் கோளுடன் வழியனுப்பி வைத்துள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் எம்மாவுக்காக கார்ட்டூன் கதாப்பாத்திரம் போலவே வேடமிட்டு மகிழ்வித்துள்ளனர்.
இது பற்றிப் பேசியுள்ள குழந்தையின் அம்மா, “எம்மாவுக்கு டிஸ்னி படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மருத்துவர்கள் அவளை வழியனுப்பிய விதம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. எம்மாவும் இதை மிகவும் விரும்பினாள்” எனக் கூறியுள்ளார்.