'இது அங்கப்பிரதட்சணம் இல்ல'.. சாலையில் உருண்டு மாணவர்களின் நூதன போராட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 10, 2019 04:52 PM
சாலை ஒழுங்கான பராமரிப்புடன் இல்லை என்று பள்ளி மாணவர்கள் புத்தகப் பைகளுடன் சாலையில் உருண்டுள்ள நூதன போராட்டம் இணையத்தில் பரவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே உள்ள கோடங்கப்பட்டியில் விருதுநகர், ஆனைக்குளம் வழியாக செல்வதற்கான சாலை வசதிகள் உள்ளன. எனினும் ஆனைக்குளத்தில் இருந்து 12 கி.மீ தொலைவுக்கான சாலை போட்டு 20 வருடங்கள் ஆகின்றன. சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் இருந்து மக்களும் மாணவர்களும் இவ்வழியாகத்தான் இத்தனை வருடங்களாக சிரமப்பட்டு ஆனைக்குளத்துக்குச் செல்கின்றனர்.
பஞ்சாயத்து யூனியனும், ஆரம்ப்பள்ளியும் மட்டுமே இருக்கும் கோடங்கப்பட்டியில் மருத்துவம் தொடங்கி பல்வேறு அத்தியாவசியத்துக்கும் ஆனைக்குளத்திற்கே செல்ல வேண்டிய சூழலில், ஒரு ஆம்புலன்ஸ் வந்துபோவதற்கும் கூட சிரமமான குண்டு குழியுடன் கூடிய இந்த சாலையை செப்பனிடக் கோரியிருந்தனர் இவ்வூர் மக்கள்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று சாலை போடும் பணி தொடங்கியதாகவும், ஆனால் கோடங்கப்பட்டியின் அருகில் உள்ள ஊரான பூமலைப்பட்டி இதற்கு எதிர்ப்புத்தெரிவித்ததாகவும், அதனால் கோடங்கப்பட்டிக்கான சாலை போடும் பணி நிறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான் மாணவர்கள் இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஊர் மக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.