'எழில் கொஞ்சும் அழகு'...'626 ச.கி.மீ பரப்பளவு'... தமிழகத்தில் அமையப்போகும் நாட்டின் 51-வது புலிகள் காப்பகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாட்டின் 51-வது புலிகள் காப்பகத்தினை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை வனப்பகுதி, பல்வேறு அரிய உயிரினங்களைக் கொண்டது. 626 ச.கி.மீ பரப்பளவுள்ள மேகமலையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், அதை வன உயிரின சரணாலயமாக அறிவித்தது மத்திய அரசு. இந்த சூழ்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும் மேகமலையையும் இணைத்து புலிகள் காப்பகம் உருவாக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முக்கிய காரணமாக மேகமலையில் 8 புலிகள் மட்டுமே இருந்த சூழலில், 2018-ம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பில் 11 பெண் புலிகள், 3 ஆண் புலிகள் என மொத்தம் 14 புலிகள் மேகமலையில் இருப்பது தெரியவந்தது. இந்த சூழ்நிலையில் மாவட்ட வனத்துறையும் மேகமலையைப் புலிகள் காப்பகமாக மாற்ற அரசுக்குப் பரிந்துரை செய்தது. இவற்றைப் பரிசீலனை செய்த மத்திய அரசு ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும், மேகமலை வன உயிரின சரணாலயத் தையும் இணைத்து, நாட்டின் 51வது புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோரிக்கையினை வன ஆர்வலர்கள் அரசிடம் வலியுறுத்தி வந்தனர். தற்போது அரசின் அறிவிப்பு வனத்தையும், வனத்தில் வாழும் புலிகளுக்கும் பெரும் பாதுகாப்பை அளிக்கும் என வன விலங்கு ஆர்வலர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்கள்.