"10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்படி அமையும்?"- உறுதியாகச் சொல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்
முகப்பு > செய்திகள் > தமிழகம்10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு எப்படி நடைபெறும் என்பதை தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் உடன் இருந்து தொடக்க விழாவில் கலந்து கொண்டார். தொடக்க விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், “இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதத் திட்டம் ஆகும். இதை நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது 15 வயது 18 வயது வரையில் உள்ளவர்களுக்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பல பள்ளி, கல்லூரி மாணவர்களும் முன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள். மாணவர்களுக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் யாருக்கும் வேண்டும். நிச்சயமாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இந்த கல்வி ஆண்டில் நடைபெறும்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தாண்டு நிச்சயமாக பொதுத் தேர்வுகள் நடைபெறும். கண்டிப்பாக பொதுத்தேர்வுகள் நேரடி முறையிலான தேர்வுகளாகத் தான் இருக்கும். மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தொடங்கி உள்ளார்கள். இதற்கான பணிகளும் தமிழ்நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதுமாக இருக்கக்கூடிய சேதம் அடைந்த பள்ளிகளின் நிலை கண்டறியப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணி இதற்காகத் தொடங்கி தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது” எனக் குறிப்பிட்டார்.