தியேட்டர்களில் 100% அனுமதி ‘ரத்து’.. அதற்கு பதிலாக ‘இதை’ பண்ணிக்கொள்ளலாம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதி அளிப்பதற்கான உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி தலைமை செயலாளர் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு, ஆதரவும் ஒருசேர எழுந்தது. இந்த நிலையில் தியேட்டரில் 100% அனுமதி வழங்கியதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா கட்டுக்குள் வந்தாலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தடுப்பு மருந்து வரும் வரை பொறுமையாகவும், குழந்தைகளை போல மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும் கல்வி நிலையங்கள் திறக்க அனுமதிக்காத நிலையில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத அனுமதி என்பது நல்லதல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு வழங்கிய அனுமதியை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அதற்கு பதிலாக திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.