குழந்தையை பறிகொடுத்த 'பெற்றோர்'... 25க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' காட்சிகள் ஆய்வு.... வசமாக சிக்கிய 'கடத்தல் பெண்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி குழந்தையைக் கடத்திய பெண்ணை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அத்துடன் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.
மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஜானே போஸ்லே-ரந்தோஷ் தம்பதியின் 7 மாதக் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி கடந்த 12ம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்திச் சென்றார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனை அருகே நடைபெற்ற இச்சம்பவத்தையடுத்து, தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மருத்துவமனை சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தபோது குழந்தையை அப்பெண் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து அப்பெண் சென்ற வழியெங்கும் இருந்த 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அந்த பெண் குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து எழும்பூர் காந்தி-இர்வின் மேம்பாலம் வழியாக எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனைக்குள் செல்லும் காட்சிகள் கிடைத்தன.
இதையடுத்து, தனிப்படை போலீசார் எழும்பூர் மருத்துவமனையில் காத்திருந்தனர். எதிர்பார்த்தபடி அந்த பெண் குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்த போது மடக்கிப் பிடித்தனர். குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். குழந்தையை பெற்றோரும் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினர்.