'அதுக்கும் சேர்த்து தானே பணம் வாங்குறீங்க...?' நீங்க இப்படி இருக்கிறப்போ 'அதெல்லாம்' போட முடியாதுங்க...! 'பீர் பாட்டிலை எடுத்து அப்படியே...' சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஓலா காரில் ஏசி போட மறுத்த கார் ஓட்டுநரை போதையில் பயணித்த மூவர் சேர்ந்து பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

சென்னை ஆலந்தூர் ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தின் அருகில் இருந்து சனிக்கிழமை இரவு கோவிலம்பாக்கம் செல்வதற்காக 3 பேர் ஓலா அப்ளிகேஷன் மூலம் கார் புக் செய்துள்ளனர். அவர்களை அழைத்துச் செல்ல அனகாபுத்தூரைச் சேர்ந்த 35 வயதான டாக்சி ஓட்டுநர் லோகநாதன் ஆலந்தூர் சென்றுள்ளார்.
மது போதையில் இருந்த மூவரும் காரில் ஏறி உள்ளனர். உடனடியாக காரில் ஏசி போடுமாறு அவர்கள் கூறி உள்ளனர். மூவரும் மது அருந்தி உள்ளதால், காரை ஏசி போட்டு தன்னால் ஓட்ட முடியாது என்றும், அதனால் காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு ஓட்டுவதாக கூறி உள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து ஏசிக்கும் சேர்த்துதான் பணம் தருகிறோம், அதனால் ஏசி போட வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஆனால் ஓலா ஓட்டுநர் ஏசி போட திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனை அடுத்து தாங்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் லோகநாதன் தலையில் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் லோகநாதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ரத்தம் சொட்டச் சொட்ட லோகநாதன் பரங்கிமலை காவல்நிலையத்திற்கு காரை கொண்டு சென்றுள்ளார். காரில் வந்த மூவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன், அவர்கள் மீது புகாரும் கொடுத்துள்ளார்.காயத்துடன் இருந்த, லோகநாதனை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஓலா ஓட்டுநர் தாக்கப்பட்டதை அறிந்து மற்ற கார் ஓட்டுநர்கள் ஒன்றுகூடி, பரங்கிமலை காவல்நிலைய வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லோகநாதன் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுப்பதாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மது போதையில் இருந்ததால் காரில் ஏசி போட மறுத்த ஓட்டுநர் மீது, காரில் சென்றவர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
