“தோக்கடிக்க எவ்வளவோ ட்ரை பண்ணாங்க”.. “24 மணிநேரமும் கிராமத்துல ஹாஸ்பிடல் வரும்!”.. 22 வயது பெண் டாக்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jan 14, 2020 08:09 PM
தமிழகத்தில் 27 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியின் தலைவராகப் போட்டியிட்ட 22 வயது அஸ்வினி 2,547 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராகியுள்ளார்.
ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதற்காக, ஹைதராபாத்தில் எம்.பி.பி.எஸ் மருத்துவம் படித்த அஸ்வினி, சிறு வயதில் இருந்தே அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டதோடு, மக்களிடம் அவர்களின் பிரச்சனைகளை அவ்வப்போது கேட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அஸ்வினி, “அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல், தரமான குடிநீர் வசதிகூட இல்லாம தவிக்குற என் ஊர் மக்கள், தங்களுக்கு யாரும் நல்லது செய்யலனு சொல்லி ஆதங்கப்பட்டாங்க. அவங்களுக்கு எதாவது செய்யணும்னு யோசிச்சப்பதான், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு செஞ்சிருக்குற விஷயத்த கேள்விப்பட்டேன். அதனால தேர்தல்ல நின்னேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் “என் வெற்றியைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தும் நான் ஜெயிச்சு பதவியில உட்கார்ந்திருக்கேன். 24 மணி நேர மருத்துவ வசதி தொடங்கி என் மக்களுக்கு தேவையான அத்தனையும் அடுத்த 5 வருஷங்களுக்குள் செய்வேன். மேற்படிப்புக்காக நீட் தேர்வு எழுதுவேன். ஒரே நேரத்தில் திறம்பட எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும்” என்று பேசியுள்ளார்.