‘புகை மண்டலமாக’... ‘காட்சி அளிக்கும் சென்னை’... ‘காற்று மாசுதான் காரணமா?’... ‘இந்த 3 இடங்களில் ரொம்ப அதிகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 08, 2019 04:23 PM

சென்னையில் கடந்த 3 நாட்களாக, புகை மண்டலமாக காணப்படுவது, அனைவரையும் அச்சுறுத்தி வருவது குறித்து, சென்னை வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.

smog chennai air quality getting very poor manali velachery

தலைநகர் டெல்லியில் சுவாசிக்க முடியாத அளவிற்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னையிலும் காற்று மாசு பாதிப்பு இருக்குமா என நினைத்து வந்தவேளையில், கடந்த 3 நாட்களாக சென்னையின், பல்வேறு இடங்களில், பனிமூட்டம் போன்று புகை மண்டலம் காணப்படுகிறது. இதன்மூலம், டெல்லியை மிஞ்சும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, சற்று சென்னையில் காற்று மாசு  அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. வழக்கமாக காற்று தர குறியீடு 50 வரை (Air Quality Index) மட்டுமே இருப்பது நல்லது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, சென்னை மணலியில் 320 மைக்ரோ கிராம், வேளச்சேரியில் 292 மைக்ரோ கிராம், ஆலந்தூரில் 285 மைக்ரோ கிராமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சென்னை வானிலை மையம் தெரிவித்ததாவது, ‘தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் பனிப்பொழிவு துவங்கவில்லை. வங்க கடலில் புல் புல் புயல் சுழல்வதால், தமிழகத்தை நோக்கி தென்மேற்கில் இருந்து வரும் காற்றின் வேகம், கடந்த 3 நாட்களாக தடைப்பட்டுள்ளது.

இதனால் வாகனம், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகள், வளிமண்டலத்திற்கு மேலே செல்லாமல், தரை மட்டத்திலே தங்கி விடுவதால், சென்னை புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அதனால் காற்றில் கலந்த மாசு, நகர முடியாமல் வளி மண்டலத்தில் மிதக்கிறது. கடல் காற்றின் வேகம் அதிகரித்தால், இந்த நிலை மாறி விடும்’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்னரே, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், டெல்லியை தொடர்ந்து, சென்னை மற்றும் தமிழகத்திலும் காற்று மாசு ஏற்படும் அபாயம் உள்ளது என்று, எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #POLLUTION #AIR #QUALITY