"ஹலோ,, உங்களுக்கு 'கார்' பரிசா கெடச்சுருக்கு..." போனிற்கு வந்த 'அழைப்பு',,.. அடுத்தடுத்து நடந்த 'ட்விஸ்ட்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் நபர் ஒருவர், கொரோனா காலம் என்பதால் கடந்த 4 மாதங்களாக பல பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி வந்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட மோசடி கும்பல், அவரது எண்ணுக்கு இன்று மதிய வேளையில் தொடர்பு கொண்டது. அப்போது பெண் ஒருவர் அந்த நபரிடம், நீங்கள் ஆன்லைனில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கியதால் உங்களுக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கவுள்ளதாகவும், அதற்கான சிறப்பு பரிசாக பல லட்ச
ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக அளிக்கவுள்ளோம் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, சிறப்பு பரிசான காரை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முன்பணமாக 6 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் என அந்த பெண் தெரிவித்துள்ளார். பணம் அனுப்ப வேண்டும் என தெரிவித்ததால் சுதாரித்துக் கொண்ட அந்த நபர், இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
உடனடியாக காவல் ஆய்வாளர், மோசடி கும்பல் பேசிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது, உங்கள் எண்ணிற்கும் கார் பரிசாக கிடைத்துள்ளது என்று மறுமுனையில் பேசிய பெண், போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தான் ஒரு காவலர் என தெரிவித்த நிலையில், உடனடியாக பெண் அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனையடுத்து அந்த தொலைபேசி எண்ணைக் கொண்டு சைபர் க்ரைம் உதவியுடன் அவர்கள் எந்த இடத்தில் இருந்து அழைத்தனர் என்பது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.