'நான் இப்படி இருந்தனால, வீட்ட விட்டே தொரத்திட்டாங்க தம்பி...' 'என் மனசே மரத்துப் போச்சு...' கண்கலங்க வைக்கும் சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவக்குத் தீபாதாரனை காட்டி கார்த்திகேயன் திருநீறு பூசிவிட, அவர் கண்கள் கலங்கி, `நான் இதுவரை மரத்துப்போன மனதோடுதான் வாழ்ந்தேன். ஆனா, என் மனசை நெகிழ வெச்சுட்டீங்க தம்பி' என்று கண்ணீரோடு சொல்லியிருக்கிறார்.

குளித்தலையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து, அங்குள்ள முதியோர்களுக்கு முதியவர்களை நெகிழ வைத்திருக்கிறார்கள் குளித்தலை நகரப் போக்குவரத்துப் பிரிவு போலீஸார்.
மேலும், அவர்களுக்குப் பொங்கலை ஊட்டிவிட்டதோடு, தங்கள் சார்பில் அவர்களுக்குப் புத்தாடையும் வழங்கி, `எங்களை உங்க பிள்ளைகளாக நெனச்சுக்குங்க. என்ன ஆசைப்படுறீங்களோ, அதைச் செய்ய உங்க பிள்ளைங்க நாங்க காத்திருக்கிறோம்" என்றும் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.
கரூர் மாவட்டம், குளித்தலை நகரப் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளராக இருப்பவர், கார்த்திகேயன். இவர் இங்கு பணிக்கு வந்து சிலமாதங்களே ஆகின்றன. ஆனால், இங்கு பணிக்கு வந்த நாள் முதல் இவரின் செயல்பாடுகள், மக்களை ஈர்க்கும்விதமாக இருக்கின்றன.
இந்த நிலையில், கரூர் நகரப் போக்குவரத்துக் காவல்நிலையத்தின் சார்பில், குளித்தலையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களோடு பொங்கலைக் கொண்டாடி, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார்.
அந்த முதியோர் இல்லத்தில் உள்ள அனைத்து முதியோர்களுக்கும் குளித்தலை நகர டி.எஸ்.பி கும்மராஜாவை வைத்து, வேட்டி, சேலை, துண்டு வழங்க வைத்தார். மாற்றுத்திறன் கொண்ட ஒரு முதியவருக்குத் தீபாதாரனைக் காட்டி கார்த்திகேயன் திருநீறு பூசிவிட, அவர் கண்கள் கலங்கி, `நான் இப்படி ஊனமான நிலையில் இருந்ததால், எங்க வீட்டுல என்னை துரத்திவிட்டுட்டாங்க. இதுவரை மரத்துப்போன மனதோடுதான் வாழ்ந்தேன். ஆனா, என் மனசை நெகிழ வச்சுட்டீங்க தம்பி' என்று கண்ணீரோடு சொல்ல, கார்த்திகேயன் அவரை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.
இது பற்றி அவர் பேசுகையில் ``நான் இங்கு பணிக்கு வந்த நாளிலிருந்து, மக்களுக்கும், போலீஸுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை முதலில் குறைக்க நினைச்சேன். ஹெல்மெட் போடாம வருபவர்கள் மீது வழக்கு போடுவதைவிட, அவர்களின் மனதை மாற்றும்விதமா ஆளுக்கொரு ஹெல்மெட் கொடுத்து, அறிவுரை சொன்னேன். இதனால், ஹெல்மெட் போடாமல் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. எங்கள் பணி மட்டுமல்லாது, பொதுமக்களோடு பல விசயங்களில் நெருக்கமாக வசதியாக, பல நிகழ்வுகளை நடத்த ஆரம்பித்தோம். இந்தநிலையில்தான், காவலர்கள் அனைவரும் சேர்ந்து இந்த முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களோடு சேர்ந்து பொங்கலைக் கொண்டாட நினைத்தோம்.
எங்க செலவில் அத்தனை முதியோர்களுக்கும் புது உடை எடுத்துக் கொடுத்தோம். அதோடு, பொங்கல் வைத்து, அவர்களுக்கு எங்கள் கைகளால் பரிமாறினோம். பலரும், `பல வருடங்களுக்குப் பிறகு பொங்கலை சொந்தப் பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டாடுன மாதிரியான உணர்வை ஏற்படுத்திட்டீங்க. வறண்டு கிடந்த எங்க மனங்களில் புத்துணர்ச்சியைக் கொடுத்துட்டீங்க. உங்களை எங்க வாழ்நாளைக்கும் மறக்கமாட்டோம்'னு உணர்ச்சிமேலிடச் சொன்னாங்க. நாங்களும் அவங்ககிட்ட, `எங்களை உங்க பிள்ளையா நெனச்சுக்குங்க. என்ன ஆசைப்பட்டாலும், அதை நாங்க நிறைவேத்துறோம்'னு உத்தரவாதம் கொடுத்துட்டு வந்தோம். எங்களுக்கும் இந்த பொங்கலை நிறைவா கொண்டாடுன திருப்தி" என்று உள்ளம் மகிழ்ச்சிப் பொங்க கூறினார்.
