'ஆன்லைனில் டிக்கெட் புக் பண்றீங்களா?'...'கட்டணத்தில் அதிரடி மாற்றம்'...தமிழக அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 13, 2019 01:06 PM
ஆன்லைனில் செய்யப்படும் சினிமா டிக்கெட் முன்பதிவிற்கான சேவை கட்டணத்தில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மக்களின் பொழுதுபோக்கில் முக்கிய பங்காற்றுவது சினிமா. வார விடுமுறை நாட்களில் திரையரங்குகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படும். இதனால் மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக் செய்வதே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக சேவை கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணம், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆன்லைனில் எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சேவை கட்டணத்தில் செய்யப்படும் மாற்றம், குடும்பமாக திரையரங்கிற்கு செல்வோர், மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட டிக்கெட்களை ஆன்லைனில் புக் செய்யும் பட்சத்தில், அவர்களின் பணம் பெருமளவு மிச்சப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.