'கைகளில் காசில்லை...' கைப்பந்து போட்டியில் சாதிக்க தடை.. உதவிக் கோரும் தமிழக இளைஞர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 08, 2020 04:11 PM

உலக அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றும், போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவியில்லாமல் தருமபுரியை சேர்ந்த இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.

\'No cash in hand ...\' Prohibition to achieve volleyball match ..

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த  சஞ்சீவ்குமார், சிந்தனைச்செல்வன்,  ரவிச்சந்திரன்,பாலாஜி, முகேஷ்,சூர்ய பிரசாத், உள்ளிட்ட இளைஞர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை  சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் வாழும் ஊர்களில் தினந்தோறும் கைப்பந்து விளையாடுவதைக் கண்டு, அதன் மீது ஏற்பட்ட அதிக ஆர்வத்தினால் பயிற்சி பெற்றனர். அரசு பள்ளியில் படிக்கும் பொழுது, பள்ளி அளவிலான கைப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு இடங்களில் விளையாடி வந்தனர். இதைத்தொடர்ந்து கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட அமைப்பில் கலந்து கொண்டு, பல்வேறு இடங்களில் கைப்பந்து போட்டியில் பங்கேற்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதிப் பெற்றனர். இதையடுத்து திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியிலும் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். அத்துடன் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாடியும் இவர்கள் சாதித்தனர். இந்நிலையில் உலக அளவிலான கைப்பந்து போட்டிக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலக அளவிலான கைப்பந்துப் போட்டி வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நேபாளத்தில் தொடங்கவுள்ளது. ஆனால் வறுமையின் காரணமாக நேபாளத்தில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் இவர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவி வருகிறது. ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த இவர்கள், நேபாளத்திற்கு சென்று வரவேண்டும் வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். இந்தத் தொகையை தங்களாலும், தங்களது பெற்றோர்களாலும் கொடுக்க முடியாத சூழல் இருப்பதால், நேபாளத்தில் நடைபெறும் கைப்போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையிருப்பதாக அவர்கள் வருந்துகின்றனர்.

யாரேனும் உதவி செய்து உலக அளவிலான போட்டியில் கலந்து கொண்டால், நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று அந்த ஏழை இளைஞர்கள் கோருகின்றனர்.

Tags : #BOLLEYBALL #PLEASEHELP