'இந்த கிணற நம்பி 30 விவசாயிகள் இருக்கோம்...' 'ஹெமிக்கல் கழிவை கிணற்றில் கொட்டிய மர்ம நபர்கள்...' வருத்தப்படும் விவசாயிகள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கை பயன்படுத்தி மாங்காசோளிபாளையம் என்ற கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தும் 2 கிணறுகளில் மர்ம நபர்கள் சாயக்கழிவை கலந்ததால் கிணற்றில் இருந்த தண்ணீர் எல்லாம் சிவப்பாக மாறிய சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சியில் வரும் மாங்காசோளிபாளையம் என்ற கிராமத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான இரு கிணறுகளில் மர்ம நபர்கள் சாயக்கழிவைக் கலந்துள்ளார். இதன் காரணமாக கிணற்றில் இருந்த தண்ணீரும், அதிலிருந்து வயலுக்கு பாய்ச்சிய இடங்களும் சிவப்பு நிறமாகிய இடங்களை கண்டு விவசாயிகள் பதறி போயின.
இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் பேசுகையில், கொரோனா வைரசால் ஊரடங்கு அமலில் உள்ளதால் கிராம மக்கள் வெளியே வராத நேரம் பார்த்து யாரோ சில மர்ம நபர்கள் எங்கள் கிராமத்தை சேர்ந்த ராமசாமி, அம்மையப்பன், பழனியப்பன் வாரிசுதாரர்களுக்குச் சொந்தமான இரண்டு விவசாயக் கிணறுகளில் சாயக்கழிவு நீரை ஊற்றியுள்ளதாக கூறினார்.
மேலும் இந்த கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் தான் விவசாயப் பயன்பாட்டுக்குப் பயன்படுவதாகவும், இந்த 2 கிணறுகளையும் நம்பி 30 விவசாயிகள் பத்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும் வருத்ததுடன் கூறினார்.
கோடைக்காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது இந்த கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரை தான் தங்கள் கிராம மக்கள் அனைவரும் பயன்படுத்தியதாகவும் கூறினார். ஆனால் தற்போது நாங்கள் வெளியே வராத சமயம் பார்த்து யாரோ சிலர் இப்படி ரசாயன கழிவுகளை கொட்டி கிணறு முழுவதையும் பாழாக்கிவிட்டதாகவும் மிகுந்த சோகத்துடன் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் கிராம நிர்வாக அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சாயக்கழிவை இப்படி கிணறுகளில் கலந்தவர்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் இரு கிணறுகளும் தான் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்பதால் சாயக்கழிவு நீரை அகற்றித் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
