நெருங்கும் தீபாவளி.. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க.. அமைச்சர் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான போன் நம்பர்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சிறப்பு பேருந்து
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தமிழகத்தின் பிற ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வாடிக்கை. பண்டிகை காலங்களில் சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு இது பேருதவியாக அமைகிறது. இருப்பினும் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த பேருந்துகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு செப்டம்பர் 20 ஆம் தேதி, சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு துவங்கியது. இந்நிலையில், இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அரசு துறை அதிகரிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் அமைச்சர் சிவசங்கர்.
புகார்
போக்குவரத்து கழக இயக்குனர்கள், போக்குவரத்து காவல்துறை உயரதிகாரிகள், சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,"தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து வழக்கமான பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் சேர்த்து 10,518 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. அதேபோல, தமிழகத்தின் பிற பகுதியில் இருந்து 6370 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமாக இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் 1800 425 6451, 044-2474900 ஆகிய எண்களுக்கு அழைக்கலாம். அதேபோல அரசு பேருந்துகள் இயக்கம் குறித்தும், புகாரளிக்கவும் பொதுமக்கள் 9445014450, 9445014436 ஆகிய எண்களுக்கு போன் செய்யலாம்" என்றார்.
அதேபோல, தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.